தேர்தல் ரேஸில் எந்த குதிரை முந்துது?: திமுகவா… அதிமுகவா?

நமது சிறப்பு நிருபர்

தமிழக தேர்தல் களம் அனல் பறந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் முன்னணி குதிரைகளாக திமுகவும் அதிமுகவும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்றைய தேதிக்கு எந்த குதிரை முன்னால் ஓடுகிறது என்ற கேள்விக்கு பதில்….

‛‛சாட்சாத், அதிமுக தான் ரேஸில் முந்துகிறது” என்று சத்தியம் செய்யாத குறையாக கூறலாம்.

காரணங்கள் இதோ:

* கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது என்னவோ திமுக தான். காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூ.,கள் என்று ஏகப்பட்ட பொதிகளை சுமந்துகொண்டு இருந்த திமுக குதிரை, அதிக ‛‛லோடு” இருந்ததால் மூச்சு வாங்க ஆரம்பித்தது.

* ஆனால் பாஜ, அமமுக, பாமக என்று அளவான ‛‛லோடு” சுமந்துகொண்டு இருந்த அதிமுக குதிரை தாமதமாக ஓட ஆரம்பித்தாலும் துாக்குகிற அளவுக்கு சுமை இருந்ததால் சீக்கிரமாகவே பேச்சுவார்த்தையை முடித்து ஒப்பந்தமும் போட்டது.

* திமுக கூடாரத்திலோ நிலைமை தலைகீழ். தொகுதி எண்ணிக்கையில் அடித்துப் பிடித்து ஒரு முடிவுக்கு வந்தவர்கள், தொகுதிகளை முடிவு செய்வதில் இன்னமும் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கிறார்கள்.

* அதிமுக கூடாரத்திலோ நிலைமை வேறாக இருக்கிறது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக, வேட்பாளர் பட்டியலையே அறிவித்துக்கொண்டு இருக்கிறது. இதில் லேசாக ‛‛கசமுசா” இருந்தாலும் பெரிய அளவில் சத்தம் எழவில்லை.

* பிரசாரத்தையும் திமுக தலவர் ஸ்டாலின் இன்னும் துவக்கவில்லை. தேதியையும் மாற்றி மாற்றி கூறிக்கொண்டு இருக்கின்றனர். அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதியும் அப்படியே.

* ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் இருந்து பிரசாரத்தை துவக்கி விட்டார். தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சியினரையும் கூட வைத்துக்கொள்கிறார்.

* ஆக, தேர்தல் ரேஸில் அதிமுக குதிரை ‛‛அரக்க பரக்க” ஓடிக்கொண்டு இருக்க, திமுக குதிரை மூச்சு வாங்கி, முக்கிக்கொண்டு இருக்கிறது.

Source link