தேர்தல் வெற்றிக்காக அமைச்சர் தடபுடல் அசைவ விருந்து

சிங்கம்புணரி: தேர்தல் வெற்றிக்காக அமைச்சர் பெரியகருப்பன், கட்சியினர் 3 ஆயிரம் பேருக்கு விருந்து அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட தி.மு.க., செயலாளரும், திருப்புத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வும் ஆன அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் பிரான்மலை அடிவாரத்தில் உள்ள அழகு சொக்கர் கோயிலில் வழிபாடு நடத்தி அங்குள்ள திடலில் விருந்து வழங்குவது வழக்கம்.

கடந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு விருந்து அளித்ததால், தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளுக்கு ஆளானார். இதனால் இம்முறை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே நேற்று விருந்து அளித்தார்.

தொகுதி முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் 3000 பேருக்கு விருந்து வழங்கப்பட உள்ளது, அனைவரும் வருக’ என அமைச்சர் பெயரில் கட்சி வாட்ஸ்ஆப் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று கோயில் முன் உள்ள இடத்தில் 300 கிலோ ஆடு, கோழி இறைச்சியால் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. மதியம் 2:30 மணிக்கு அமைச்சர் பெரியகருப்பன் அங்கு வந்து அருகில் உள்ள அழகு சொக்கர், கருப்பரை வழிபாடு செய்தார். Image 1533871தொடர்ந்து பொட்டலுக்கு வந்த முஸ்லிம்கள் மத குருமார்கள் பாத்தியா ஓதி அமைச்சருக்கு வழங்கினர். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் 3000 பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது. அமைச்சரும் கட்சியினருடன் அமர்ந்து சாப்பிட்டார். அமைச்சரிடம் கேட்டபோது, ‘வழக்கம் போல் கட்சி ஒன்றிய செயலாளர் ஏற்பாடு செய்து கூப்பிட்டார், வந்து கலந்து கொண்டேன், என்றார்.

கட்சியினர் தெரிவித்ததாவது: 2006 ல் பெரியகருப்பன் இத்தொகுதியில் முதல்முறை போட்டியிட்டபோது, அவர் வெற்றி பெற்றால் விருந்து அளிப்பதாக கட்சியினர் நேர்ந்து கொண்டோம். அதன்படியே வெற்றிக்கு பிறகு இந்த விருந்து போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினோம். அப்போது விருந்தில் பங்கேற்ற அமைச்சர் பெரியகருப்பன், இனிமேல், இந்த விருந்தை தானே போடுவதாக கூறி சென்று, அதே போல் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக வழங்கி வருகிறார், என்றனர்.

Source link