சென்னை: ” திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடி தான் தொகுதிகளை பெற்று வருகின்றன,” என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.
சென்னை மயிலாப்பூரில் பிரசாரத்தை துவக்கிய இபிஎஸ் கூறியதாவது: அதிமுக தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் பாராட்டுகிறார்கள்.முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சி அதிமுக. ஓரிரு நாளில் அதிமுகவின் அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
கூட்டணி அமைக்க திமுக 20 நாளாக போராடுகிறது. ஒவ்வொரு கட்சியும் பதறி கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகள் பெற வேண்டிய நிலை உள்ளது. அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அடிமையாக இருக்கிறார்கள்.
ஸ்டாலினும், கூட்டணி தலைவர்கள், 10 ஆண்டுகளாக திமுக தலைமையில் பயணித்து கொண்டு இருக்கிறோம் என பேசுகின்றனர்.10 ஆண்டுகள் திமுகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.இதனால் தான் 2021 சட்டசபை தேர்தலில் வாங்கிய தொகுதிகளை விட குறைவாக வாங்கி உள்ளீர்கள்.திமுக கூட்டணி தலைவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுகவுக்கு ஆட்சி அதிகாரம் இருக்கும் போது புகழ்ந்து பாட உங்களை பயன்படுத்தி கொண்டனர்.ஆனால், தேர்தல் வரும்போது உங்களுக்கு அந்தஸ்து வழங்காத கட்சி திமுக.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் போராடி பார்த்தனர். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை பார்த்தனர். எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், கடந்த தேர்தலை போட்டியிட்ட தொகுதியை விட குறைந்த தொகுதியை பெற்றுள்ளனர். விசிக கட்சி போராடி 8 இடங்களை பெற்றுள்ளனர். அது அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக இடம் கொடுத்துள்ளனர். இது தான் திமுக.
திமுக தலைமையிலான கூட்டணி இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களிடத்தில் திமுகவுக்கு விஸ்வாசம் கிடையாது. திமுகவை நம்பியவர்களை நடுரோட்டில் விட்டுவிடுவார்கள். 5 ஆண்டுகள் திமுக ஆட்சி செய்தது. நாட்டு மக்களுக்கு என்ன செய்தது. துன்பம் தான் நம்பியது.வாரிசு அரசு அரசியல் நடத்தும் கட்சி திமுக.
வருவாய் அதிகம் வந்தும் கடன் வாங்குவதற்கு ஊழலே காரணம்.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதனை மக்கள் எப்படி திருப்பி கட்டுவார்கள்.கடன் வாங்கும் அரசு மீண்டும் தொடர வேண்டுமா?எவ்வளவோ பிரச்னை உள்ளது. அதை பற்றி முதல்வர், துணை முதல்வருக்கு கவலையில்லை.மக்கள் வரிப்பணத்தை ஊதாரிதனமாக செலவு செய்யும் அரசு தொடர வேண்டுமா? இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
