படக்குறிப்பு, “இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் அதற்கான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்,” என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமையன்று மக்களவையில் கூறினார்.கட்டுரை தகவல்
131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். இந்த பெரும்பான்மையை பெற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறிவிட்டது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும் எதிராக 230 பேரும் வாக்களித்தனர். இம்மசோதாவை நிறைவேற்ற குறைந்தது 352 வாக்குகளாவது வேண்டும்.
இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அதேசமயம் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543லிருந்து 850ஆக உயர்த்துவதையும் இந்த மசோதா அனுமதிக்கிறது.
ஆனால், இந்த மசோதா கொண்டு வரப்பட்ட நேரம் மற்றும் அரசின் நோக்கங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை குறைவாக இருக்கும் என தெரிந்தும் அரசு இம்மசோதாவை அறிமுகப்படுத்தியது ஏன்? இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதில் மத்திய அரசின் நோக்கம் என்ன?
அரசின் நோக்கம் என்ன?
படக்குறிப்பு, “நாட்டின் பெண்களின் உரிமையாக இருந்த 33 சதவிகித இட ஒதுக்கீட்டை, இனி மக்களவையிலும் சட்டப்பேரவைகளிலும் அவர்களால் பெற இயலாது” என்று அமித் ஷா கூறியுள்ளார். (கோப்புப் படம்)
அரசியலமைப்புத் திருத்த மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மசோதா தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “இன்று மக்களவையில் மிகவும் விசித்திரமான ஒரு காட்சி அரங்கேறியது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்துக்கு’ (‘நாரி சக்தி வந்தன் சட்டம்) அவசியமான அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதை, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் இம்மசோதா தோற்கடிக்கப்பட்டதும், அதனை அவர்கள் கொண்டாடியதும் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கதும், கற்பனைக்கும் அப்பாற்பட்டதுமாகும்,” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அமித் ஷா தன் பதிவில், “இப்போது நாட்டின் பெண்கள், மக்களவையிலும் சட்டப்பேரவைகளிலும் தங்களின் 33 சதவிகித இட ஒதுக்கீட்டு உரிமையை பெற இயலாது. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதைச் செய்வது இது முதல் முறையல்ல, மாறாக, அவர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். இவர்களின் எண்ணங்கள், பெண்களின் நலனுக்கோ அல்லது நாட்டின் நலனுக்கோ உகந்ததாக இல்லை,” என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த திருத்த மசோதாவை அரசியலமைப்பு மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்; நாம் அதை முறியடித்திருப்பது நல்ல விஷயம்,” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இது பெண்களுக்கான மசோதா அல்ல, மாறாக இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்பதை நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். பிரதமரிடம் நான் கூறுவது என்னவென்றால், உங்களுக்குப் பெண்களுக்கான மசோதா வேண்டுமெனில், 2023-ஆம் ஆண்டின் பெண்களுக்கான மசோதாவைக் கொண்டுவந்து, அதை இன்றிலிருந்தே நடைமுறைப்படுத்துங்கள்; அவ்வாறு செய்தால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் உங்களுக்கு 100 சதவிகிதம் ஆதரவளிக்கும்.” என்றார்.
அரசியல் நிபுணர் ஆதேஷ் ராவல் கூறுகையில், “2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு அரசியலமைப்பின் ஒரு பகுதியாகத் திகழும், மேலும் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என்று அறியப்பட்டிருந்த அந்த மசோதா, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இடையே மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக உள்ள பெண்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிரானவை என்று சித்தரிக்க, அரசாங்கம் முயன்று வருகிறது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.” என்றார்.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட நேரம் குறித்து எழும் கேள்விகள்
படக்குறிப்பு, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சி ஒரு குற்றத்தைச் செய்திருப்பதாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். ஊடகங்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியைச் சாடினார்.
ஊடகங்களிடம் பேசுகையில் அவர், “காங்கிரஸ் கட்சிக்கு வாழ்நாள் முழுவதும் நீங்காத ஒரு கரும்புள்ளி விழுந்துவிட்டது. இந்திய மக்களும், குறிப்பாக இந்தியப் பெண்களும், பெண்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்,” என்று கூறினார்.
நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மசோதாவைக் கொண்டுவந்ததன் நோக்கம், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாக இதைப் பயன்படுத்துவதே இருக்கலாம் என்று ஆதேஷ் ராவல் கருதுகிறார்.
பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய ஆதேஷ் ராவல், “இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படவில்லை; ஆயினும், இதன் நோக்கம் (மேற்கு) வங்கத்தேர்தலே என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. வங்காளப் பெண்கள் மிகுந்த முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் என்றும், அவர்கள் அனைத்துச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கேற்பவர்கள் என்றும் அவர்கள் (பாஜக) கருதுகின்றனர்; மேலும், பெண்களுக்கு அதிகபட்சப் பிரதிநிதித்துவத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழங்குகிறது என்பதும் உண்மையே. இனி வரவிருக்கும் அனைத்துச் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும், ‘நாங்கள் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயன்றோம், ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்குச் சம்மதிக்கவில்லை’ என்று பிரதமர் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறுவார்.
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…
எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு எதிரானவை என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று, மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி கருதுகிறார்.
பிபிசியிடம் பேசிய விஜய் திரிவேதி, “தன்னிடம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது, ஆனாலும் அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் ஒரு விளையாட்டாகும். அரசாங்கம் அத்தகைய சாத்தியக்கூறுகளை ஆராய முயன்றிருக்கக்கூடும். ஆனால், எதிர்க்கட்சியானது பெண்களுக்கு எதிரானது என்னும் ஒரு பிம்பத்தை உருவாக்க அரசாங்கம் விரும்புவது தெளிவாக உள்ளது.” என்றார்.
தென் மாநிலங்களின் கவலைகள்
படக்குறிப்பு, “தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், நாங்கள் இந்தியாவின் கவனத்தை ஈர்ப்போம் என்று அம்பேத்கர் பெயரால் கூறுகிறேன்,” என்று செவ்வாய்க்கிழமையன்று மு.க. ஸ்டாலின் கூறினார் (கோப்புப் படம்)
தற்போது, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்கள் மொத்தம் 129 மக்களவை இடங்களைக் கொண்டுள்ளன; அதேவேளையில், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய இரண்டு வட மாநிலங்கள் மொத்தம் 120 மக்களவை இடங்களைக் கொண்டுள்ளன.
புதிய தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தென் இந்திய மாநிலங்களின் அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.
செவ்வாய்க்கிழமையன்று, அரசு தொகுதி மறுவரையறை நடவடிக்கையை முன்னெடுத்து, அதன் மூலம் வட இந்திய மாநிலங்களுக்கு அதிக அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த மாநிலமும் ஸ்தம்பித்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்தார்.
இதை விளக்கி ஆதேஷ் ராவல் கூறுகையில், “தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, வட இந்தியாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும்; அதன் விளைவாக, தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமலேயே அரசாங்கத்தை அமைத்துவிடக்கூடிய சூழல் உருவாகிவிடுமோ என்பதே தென்னிந்திய அரசியல் தலைவர்களின் கவலையாக உள்ளது. மேலும், இது நாட்டுக்குப் பிளவு ஏற்படுத்தும் ஒன்றாக அமையக்கூடும்,” என்று குறிப்பிடுகிறார்.
“அம்பேத்கரின் பெயரால் நான் கூறுகிறேன்: தமிழ்நாட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், நாங்கள் இந்தியாவின் கவனத்தை ஈர்ப்போம். பிரதமர் நரேந்திர மோதி அவர்களே, இது தமிழ்நாட்டின் சார்பில் உங்களுக்கு விடுக்கப்படும் கடைசி எச்சரிக்கை; தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்,” என்று செவ்வாய்க்கிழமையன்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
விஜய் திரிவேதி கூறுகையில், “இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை; எனவே, தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அங்குள்ள முக்கியப் பிரச்சினை தொகுதி மறுவரையறை (delimitation) சார்ந்ததாகவே இருந்தது. இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி ஒரு பெண் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்; அவரைச் சார்ந்திருக்கும் பெண் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக முயற்சிக்கும். என் கருத்துப்படி, ஒரு அரசியல் கட்சி இவ்வாறு முயற்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதில் பாஜக எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” என்றார்.
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
