காபூல்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், அங்குள்ள டி.டி.பி., எனும் தெஹ்ரீக் – இ – தலிபான் பாக்., பயங்கரவாத அமைப்பின் மையங்கள் மற்றும் தலிபான் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் சமீபகாலமாக டி.டி.பி., பயங்கரவாத அமைப்பு விவகாரத்தில் மோதல் நிலவி வருகிறது.
ஆப்கனில் இருந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருவதால், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அங்குள்ள தலிபான் அரசை பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த அமைப்புக்கும், தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறி நடவடிக்கை எடுக்க ஆப்கன் மறுத்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், ஆப்கன் எல்லையோரம் உள்ள டி.டி.பி., அமைப்பின் நிலைகள் மீது வான் வழி தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக, இரு நாடுகளிடையே மோதல் உருவானது. இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் பாக்.,கின் ராவல்பிண்டியில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறியரக விமானங்கள் வாயிலாக ஆப்கன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஆப்கனின் கிழக்கு மற்றும் கந்தஹார் பகுதியில் தாக்குதல்களை பாக்., நடத்தி உள்ளது.
கந்தஹாரில் உள்ள முக்கிய உட்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துஉள்ளது. இந்த மோதலால், இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து, ஆப்கனின் தலிபான் அரசு தலைமை செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ”பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை,” என தெரிவித்துள்ளார்.
