தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம், 29ம் தேதி நடக்கிறது. தேர் உறுதித்தன்மையுடன் இருப்பதுகுறித்து, பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், 5 தேர்களில்,முக்கிய தேரும், பழமையான தேருமான, சோமாஸ்கந்தர் தேர், உறுதியாக இல்லை. அம்பாள் தேரும் உறுதியாக இல்லை எனக்கூறி, பொதுப்பணித்துறையினர் நிலைத்தன்மை சான்று அளிக்கவில்லை.
தேரோட்டம் நடத்த முடி யாது. அதற்கு பதிலாக, சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து தகவல்கள் பரவியதும், நேற்று காலை, ஹிந்து அமைப்பினர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனையடுத்து, தெற்கு ஆர்.டி.ஓ., மாருதிபிரியா தலைமையில், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், பேரூர் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஹிந்து அமைப்பு களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தேர்கள் உறுதித்தன்மையாக உள்ளது. தேரோட்டம் நடத்த வேண்டும் என, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, மாலையில், பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஸ்தபதி ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இரு தேர்களில் உள்ள குறைகள் குறித்து பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். ஸ்தபதி ரவி, இரு தேர்களும் நல்ல நிலையில் உள்ளது என, கருத்து தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், சோமாஸ்கந்தர் தேர் உறுதியில்லை. அம்பாள் தேரில் உள்ள சில குறைகளை நிவர்த்தி செய்தால், நாளை (இன்று) மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவு தெரிவிப்பதாக கூறி சென்றனர்.
இதனையடுத்து, அறநிலையத்துறையினர், நேற்று இரவு முதல், 5 ஸ்தபதிகளை கொண்டு பணிகளை துவங்கி, காலைக்குள் முடிக்க உள்ளதாக, தெரிவித்தனர். இதனால், தேரோட்டம் விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.
