தொழில்துறையின் ஹெலிகாப்டர் சேவை காற்றோடு போன அறிவிப்பு

தமிழகத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பயன் பாட்டிற்காக மாநிலம் முழுதும், 79 ‘ஹெலிபேடு’கள் உள்ளன. அவற்றில் பல பயன்பாட்டில் இல்லை. எனவே, சுற்றுலாப் பயணியர், பக்தர்கள் உள்ளிட்டோர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உட்பட முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயண நேரத்தை குறைப்பதற்காக, குறைந்த செலவில் ஹெலிகாப்டர் சேவையை துவக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, அரசு துறைகள், ‘ஹெலிகாப்டர்’ ஆப்பரேட்டர்களுக்கான வழிகாட்டுதல்களை ஏற்படுத்த இருந்தன. இதுதொடர்பான அறிவிப்பு, சட்டசபையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெளியிடப்பட்டது; ஆனால், செயல்பாட்டிற்கு வரவில்லை. இதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில், தொழில்துறை சார்பில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள், அறிவிப்போடு நின்று விட்டன.

அவற்றின் விபரம்:

* வணிகப் புரிதலை எளிதாக்கவும், தொழில் துவங்க தேவையான அனைத்து அனுமதிகளையும், உடனுக்குடன் பெற்று, தங்கள் திட்டத்தை விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்த ஏதுவாக ஒற்றைச்சாளர முறையை, மிக எளிதாக பயன்படுத்தும் வகையிலும், மொபைல் போன் செயலி உருவாக்கப்படும்

* நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ‘மினி டைடல் பார்க்’ அமைக்கப்படும்

* சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் கீழ், தொழில் வணிக ஆணையரகம் போல், நிர்வாக வசதிகள் கருதி, மாநில அளவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்

* தமிழகத்தில் மேம்பட்ட உற்பத்தி மையம் அமைக்கப்படும்

* நகரங்களுக்கு இடையே, வான்வழி பயணத்திற்கு, ஹெலிகாப்டர்களை பயன்படுத்த உதவும் வகையில், தமிழக வான்வழி இணைப்பு திட்டத்திற்கான வழிமுறை வகுக்கப்படும்

* தொழில்துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் திட்டங்களை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த தேவையான எண்ணிக்கையிலான கோட்டங்களுடன், தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்பு பொறியாளர் தலைமையில், பொறியியல் பிரிவு உருவாக்கப்படும்

* தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில், தொழில் பூங்காக்களை, ‘சிப்காட்’ உருவாக்கும்

* ஆலங்குளம் சிமென்ட் ஆலையில், 25 கோடி ரூபாயில், ‘எம் – சாண்ட்’ உற்பத்தி ஆலை அமைக்கப்படும்

* கடல்சார் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கடல்சார் உணவு பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை – 2025 வெளியிடப்படும்.

Source link