தொழில் வளர்ச்சிக்கு அமோகமான வாய்ப்பு; அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

நமது சிறப்பு நிருபர்

இந்தியப்பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி, 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு, திருப்பூர் ஏற்றுமதி தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம், தொழில் பன்மடங்கு வளர்ச்சி பெறும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நேற்றிரவு பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் பேசியதன் மூலம் இறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறியதாவது: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக வரி குறைப்பு மட்டுமல்ல, அந்த அபராத வரியையும் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான வரியை குறைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.

இதனால் ஆடை சார்ந்த தொழில் பன்மடங்கு வளர்ச்சி பெறும். அமெரிக்கா, இந்தியாவுக்கு 18 %, சீனாவுக்கு 35 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம், வங்க தேசத்துக்கு 20 சதவீதம், இந்தோனேசியாவுக்கு 19 சதவீதம், வியட்நாமுக்கு 20 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த போட்டி நாடுகளுக்கு இடையே இந்தியாவுக்கு மட்டும் 18 சதவீதம் குறைந்த வரியாக இருப்பதால், நிச்சயமாக இந்த தொழில் பன்மடங்கு வளர்ச்சியை பெறும். இவ்வாறு கே.எம். சுப்பிரமணியன் கூறினார்.

தை பிறந்தது; வழியும் பிறந்தது

அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறியதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர் கூறுவர். அதுபோல, ஆயுத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலுக்கு வழி பிறந்திருக்கிறது. இந்த வரி குறைப்பை பயன்படுத்திக்கொள்ள உற்பத்தியாளர்கள், தங்களது உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி குறைப்பு, அமெரிக்க வரி குறைப்பு ஆகியவற்றால் நமக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் திருப்பூர் தொழில் துறை அபரிமிதமான வளர்ச்சி பெறும். மனித வள திறனையும், உற்பத்தி திறனையும் அதிகரித்து, இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

Source link