புதுடில்லி : உலக தரத்திலான தொழில் அடித்தளத்தை உருவாக்கி, உற்பத்தி திறனை மேம்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சி பாதையை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில், ‘பவ்யா’ என்ற திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
‘பிளக்-அண்டு-பிளே’ எனப்படும், தொழில் துவங்க தயார் நிலையில் இருக்கும் வகையில், நாடு முழுதும் 100 தொழில் பூங்காக்களை அமைக்க இத்திட்டத்தின் கீழ் 33,660 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் தொழில் நகரங்களின் வெற்றியை அடிப்படையாக கொண்டு, பவ்யா திட்டம் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இந்த திட்டம் 2026–27 நிதியாண்டு முதல் 2031–32 நிதியாண்டு வரை ஆறு ஆண்டுகள் செயல்படுத்தப்படும். முதலீட்டாளர்கள் எளிதாக அணுக வசதியாக, நகர பகுதிகளுக்கு அருகில் தொழில் குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 100 முதல் 1000 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி உதவி வழங்கும்.
இதன் வாயிலாக, உட்புற சாலைகள், நிலத்தடி பயன்பாட்டு வசதிகள், வடிகால், பொது சுத்திகரிப்பு நிலையங்கள், தகவல் தொடர்பு மற்றும் நிர்வாக அமைப்புகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தயார் நிலை தொழிற்சாலை கட்டடங்கள், தனிப்பயன் உற்பத்தி மையங்கள், பரிசோதனை ஆய்வகங்கள், கிடங்குகள் ஆகிய மதிப்பு கூட்டிய வசதிகள் உருவாக்கப்படும். மேலும், தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும் ஆதரவு சேவைகள் போன்ற சமூக வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், தொழில் குழுக்களில் நிலத்தடி பயன்பாட்டு வழித்தடங்கள், பசுமை ஆற்றல் ஒருங்கிணைப்பு மற்றும் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் அடிப்படையில் லாஜிஸ்டிக்ஸ் திட்டமிடல் ஆகியவையும் மேற்கொள்ளப்படும். உலகளாவிய போட்டித்திறன் கொண்ட தொழில் சூழலை உருவாக்கும் வகையில், தொழில் நடத்த எளிய நடைமுறைகள் கையாளப்படும்.
பவ்யா திட்டத்தின் மையமாக, கட்டுப்பாடுகளை குறைத்தல், ஒற்றைச்சாளர விரைவான அனுமதிகள் மற்றும் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள் ஆகியவை மாநிலங்களின் வழிநடத்தலில் செயல்படுத்தப்படும். இதனால், திட்டமிடல் நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு தொழில்கள் விரைவாக நகர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை சார்பில், உலக தரத்திலான பசுமை ஸ்மார்ட் தொழில் நகரங்களை உருவாக்கும் பணியை, தேசிய பசுமை தொழில் வழித்தட மேம்பாட்டு நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. தற்போது 13 மாநிலங்களில் 20 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
