தோனிக்கு என்ன ஆச்சு: இரண்டு வாரம் 'ரெஸ்ட்'

சென்னை: காயம் காரணமாக தோனி இரு வாரங்கள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.

வருடம் தோறும் நடக்கும் கிரிக்கெட் லீக் போட்டியில், சென்னை அணிக்காக ‘சீனியர்’ தோனி, 44, விளையாடுகிறார். 2023ல் இடது முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். இதிலிருந்து மீண்ட இவர், கடந்த முறை ‘பினிஷிங்’ பணியை கச்சிதமாக செய்தார். இந்த ஆண்டு மீண்டும் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், துவக்கத்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘காலின் பின் பகுதி தசை பிடிப்பு காரணமாக தோனி வரும் 2 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க மாட்டார். சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்,’ என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோலி நேருக்குநேர்: இந்த காலக்கட்டத்தில் சென்னை அணி, ராஜஸ்தான் (மார்ச் 30), பஞ்சாப் (ஏப். 3), பெங்களூரு (ஏப். 5), டில்லியை (ஏப். 11) எதிர்த்து விளையாடுகிறது. லீக் சுற்றில் சென்னை-பெங்களூரு ஒரு முறை தான் மோதுகின்றன. இப்போட்டி (ஏப்.5) முதல் இரு வாரத்திற்குள் வருவதால், தோனி-கோலி (பெங்களூரு) நேருக்குநேர் மோதலை காண இயலாது. ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றால், இருவரும் சந்திக்கலாம். இத்தொடருடன் தோனி ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால், இரு ஜாம்பவான்களை களத்தில் காண முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம்.

சென்னை அணியில் இம்முறை தோனிக்கு பதிலாக ரூ. 14.20 கோடிக்கு வாங்கப்பட்ட இளம் கீப்பர்-அதிரடி பேட்டர் கார்த்திக் சர்மா, 19, அல்லது உர்வில் படேல் இடம் பெறலாம். ‘கீப்பிங்’ பணியை சஞ்சு சாம்சன் ஏற்கலாம். கேப்டனாக ருதுராஜ் நீடிப்பார்.

Source link