''தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மற்றும் அதிகாரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி

”தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மற்றும் அதிகாரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்.,” என த.வெ.க., பிரச்சார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகம் முழுதும் த.வெ.க.,வினர் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் கமிஷனின் உரிய அனுமதியுடன் இன்று நான்கு இடங்களில் விஜய் தேர்தல் பிராசரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்

. பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் முடிந்தபின், அங்குப் போக்குவரத்து சீராகவே இருந்தது, மக்கள் கூட்டமும் அதிகமாகக் கூடவில்லை.

நாங்கள் அரசியல் ரீதியாக எவர் மீதும் வீண் குற்றச்சாட்டு சுமத்துபவர்கள் அல்ல. காவல்துறை அனுமதி அளித்த இடங்களில்தான் நாங்கள் எங்களது பரப்புரையை மேற்கொண்டோம்.

பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லக்கூடிய வழியில் திட்டமிட்டுச் சிக்கல் ஏற்படுத்தப்பட்டது. நாங்கள் எந்த வழியாகச் செல்வோம் என்பது காவல்துறைக்கு முன்கூட்டியே தெரியும்.

எனினும், தனது சொந்தத் தொகுதியான கொளத்தூருக்குள் விஜய் வரக்கூடாது என்ற நோக்கில், கரூரில் நடந்தது போன்ற ஒரு அசம்பாவிதச் சம்பவத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் முயல்கிறார்.

தனது தொகுதியில் மற்றவர்கள் யாரும் பரப்புரை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் செயல்படுகிறார். தனது தொகுதியில் யார் போட்டியிட்டாலும் அவர்களை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார்.

கொளத்துாரில் நாங்கள் சென்ற எந்த இடத்திலும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. குறுகிய சாலைகளில் அதிகப்படியான மக்கள் திரண்டு வருகின்றனர். நாங்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தும், குழந்தைகளும் பொதுமக்களும் திரண்டு வரும் சூழலில் காவல்துறை உயர் அதிகாரிகள் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் செயல்படுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சை கேட்டுக்கொண்டே அவர்கள் இவ்வாறு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கின்றனர்.

விஜய்யின் பரப்புரையை முடக்க வேண்டும் என்பதே முதல்வரின் ஒரே நோக்கமாக உள்ளது. முதல்வர் மட்டும் ‘ரோடு ஷோ’ நடத்தலாம், நாங்கள் நடத்தக்கூடாதா? ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தான் விஜய் அந்த இடத்திலிருந்து விலகினார்.

26 கட்சிகள் தங்களது கூட்டணியில் உள்ளதாகக் கூறும் ஸ்டாலினுக்கு, எங்களைப் பார்த்து ஏன் இவ்வளவு பயம்? ஒரு சில தொகுதிகளில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டாலும், கொளத்தூரில் மட்டும் முதல்வரின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படுகின்றனர்.

தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மற்றும் அதிகாரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார். தேர்தல் கமிஷன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

நெரிசல் காரணமாகவே எங்களால் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link