“த.மா.கா.விற்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவெடுக்கப்பட்டது”

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று (23.03.2026) நடைபெற்றது. 

இதற்காகத் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நேற்று  சென்னைக்கு வருகை தந்தார். இதனையடுத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நோக்கில் பியூஷ் கோயல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான ‘எம்.ஜி.ஆர் மாளிகையில்’ அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். அதே சமயம் கூட்டணிக் கட்சித் தலைவர்களான பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

இதனையடுத்து அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 27தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அ.ம.மு.க.விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்றொருபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த தேர்தலில் தங்களுக்கு 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க., 3இல் இருந்து 4 தொகுதிகள் வரை கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை பதவி தரப்பட்ட நிலையில், இம்முறை அதுவும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (23.03.2026) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுக்கு ஜி.கே. வாசன் வராமல் புறக்கணித்திருந்தார். இதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் த.மா.கா.வின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. நான் நேற்று (23.03.2026 – திங்கட்கிழமை) இரவு சென்னையில், மத்திய அமைச்சரும். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலைச் சந்தித்தேன். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் த.மா கா.விற்கான தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link