தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இத்தகைய சூழலில் தான் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த 23ஆம் தேதி (23.03.2026) நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை நேற்று முன்தினம் (25.03.2026) அறிவித்தார். அதன்படி அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த 5 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை த.மா.கா.வின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (27.03.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர், ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன், கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன், ஈரோடு மேற்கு தொகுதியில் எம். யுவராஜா மற்றும் கும்பகோணம் தொகுதியில் அசோக் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே, ‘12:12 மணிக்குத்தான் வேட்பாளர்களை அறிவிப்பேன். இது எங்கள் கட்சியின் சென்ட்டிமென்ட்’ எனக் கூறி ஜி.கே. வாசன் பேட்டியளித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “எங்களுக்கு (த.மா.கா) சைக்கிள் சின்னம் கிடைக்காததால் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தேசிய அளவில் தாமரை சின்னம் இரட்டை இன்ஜின் சின்னம் என்பதாலும், பாஜகவுடன் நாங்கள் நேரடி கூட்டணியில் இருப்பதாலும் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
காமராஜரின் ஆன்மா இனி காங்கிரஸை மன்னிக்கவே மன்னிக்காது. காமராஜர் எமர்ஜென்ஸி காலத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டார். காங்கிரஸ் கட்சி இன்று எந்தக் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது என்பதை மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். என்னுடைய கட்சியில் சிலருக்கு அதிருப்தி இருக்கிறது. இது நியாயமான அதிருப்தியே. ஒருவர் கட்சி பணிக்காக அங்கீகாரம் வேண்டும் என நினைக்கக் கூடிய நேரம் தேர்தல் தான். அதைப் பூர்த்தி செய்யும் கடமை அக்கட்சித் தலைவருக்கு உண்டு.
சென்னையில் போட்டியிடத் தொகுதி கேட்டேன். கொடுக்கவில்லை. அதனால் நான் தொகுதிகளைக் கேட்டு வாங்கவில்லை. வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன்” எனத் தெரிவித்தார். அதே சமயம் தமாகாவில் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் நெருங்கும் வேளையில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தமாகா தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
