த மிழக தேர்தல் களத்தில், கட்சித் தலைவர்களின் பிரசாரமும் வேட்பாளர்களின் ஓட்டு வேட்டையும் சூடுபிடித்துள்ள நிலையில், தினமும் 500 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, கட்சிகளின் வட்டாரங்கள் கூறியதாவது:
‘பூத்’ எனப்படும் ஓட்டுச்சாவடி மையங்கள், ஒரு தொகுதியில் சராசரியாக 300 உள்ளன. ஒரு பூத்தில், 1,000 வாக்காளர்கள் வரை உள்ளனர்.
இதில், 200 வாக்காளர்களின் ஓட்டுகளை கட்டாயம் பெற வேண்டும் என்றும், அதற்கு மேல் கிடைக்கும் ஓட்டுகளால் வெற்றியை உறுதி செய்து விடலாம் என்றும், தி.மு.க., – அ.தி.மு.க., வேட்பாளர்கள் கருதுகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு பூத்திலும், வீடுகளுக்கு துண்டறிக்கை வழங்குவது, கட்சி கொடி ஏந்தி ஊர்வலமாக செல்வது போன்ற தேர்தல் பணிகளுக்கு, குறைந்தது 200 பேரையாவது, தி.மு.க., – அ.தி.மு.க., நிர்வாகிகள் பயன்படுத்துகின்றனர். அவர்களில் ஒருவருக்கு தினமும் 200 ரூபாய் தருகின்றனர். இப்படி ஒரு பூத்துக்கு தினசரி 75 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

ஒரு தொகுதியில் உள்ள 300 பூத்துகளுக்கு தினமும், 2.25 கோடி ரூபாய் செலவாகலாம். ஒரு தொகுதிக்கு 2.25 கோடி ரூபாய் என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 200 தொகுதிகளுக்கு என்று எடுத்துக் கொண்டால் கூட, 450 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
தேர்தல் பணிகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணத்தை செலவு செய்து, தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து விட்டால் சிக்கல் ஏற்படலாம் என்பதால், இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ரொக்கமாகவே செலவு செய்கின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
