தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மற்றொருபுறம் தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணனின் மைத்துனர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, உரிய ஆவணங்கள் ஏதுவுமின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இந்தப் பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் பறிமுதல் செய்யப்பட்ட தொகையானது அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். த.வெ.க. வேட்பாளரின் நெருங்கிய உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் ரொக்கத் தொகை சிக்கியிருப்பது தொகுதி மக்களிடையேயும், வாக்காளர்களிடமும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
