குவஹாத்தி: “மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல்கள் இல்லாத நாடாக இந்தியா மாறும்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள அனைவரும் வெளியேற்றப்படுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 87வது தின அணிவகுப்பு நேற்று நடந்தது.
வடகிழக்கு மாநிலங்களிலேயே முதன்முறையாக நடந்த சி.ஆர்.பி.எப்., தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜம்மு – காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளன. மணிப்பூரில் இனக் கலவரங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. அங்கு நடமாடிய நக்சல்களின் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டுள்ளன.
இதற்கு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் முக்கிய காரணம். மத்திய அரசு ஏற்கனவே நிர்ணயித்த காலக்கெடுவான வரும் மார்ச் 31க்குள், நம் நாடு நக்சல்கள் இல்லாத பகுதியாக மாறும்.
நாட்டில் இருந்து நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்படும். இது, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையில் நான் கூறுகிறேன்.
சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில், கடந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் கர்ரேகுடா மலைகளில் 21 நாட்கள் நடைபெற்ற போரில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம் சி.ஆர்.பி.எப்., வீரர்களின் கடும் உழைப்பு.
அங்கு நிலவிய 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில், நாள்தோறும் 15 லிட்டர் தண்ணீர் வியர்வையாக வீணாகும்போது, நக்சல்களின் பிடியில் இருந்து மலையை விடுவிக்க துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கோட்டையை சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இடித்து தள்ளினர். 10 ஆண்டுகளுக்கு முன் ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதமும், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியும் அதிகரித்திருந்தன.
தற்போது, அந்த நிலைமை முற்றிலும் மாறி அமைதியான சூழல் நிலவுகிறது. குண்டுவெடிப்புகள், தோட்டாக்கள், முற்றுகைகள், அழிவுகளுக்கு பெயர் பெற்ற இந்த பகுதிகள், இன்று வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
