ஐதராபாத்: தெலுங்கானாவில் 42 நக்சல்கள் சரண் அடைந்தனர். இதனையடுத்து நக்சல்கள் இல்லாத மாநிலமாக தெலுங்கானா மாறி உள்ளது.
இந்தியாவை நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்காக அந்த அமைப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். பலர் சரண் அடைந்தனர். இதனால்,அந்த அமைப்பினர் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. நக்சல் அமைப்பினர் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்த 41 பேர் போலீசிடம் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் 800 கிராம் தங்க பிஸ்கட்களை போலீசிடம் ஒப்படைத்த அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதன் மூலம் நக்சல் அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டதாகவும், நக்சல்கள் இல்லாத மாநிலமாக தெலுங்கானா மாறி உள்ளது என்று அம்மாநில டிஜிபி ஷிவ்தர் ரெட்டி அறிவித்துள்ளார்.
மேலும் அவர், இதன் வாயிலாக பிரிவினைவாதிகளை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக பணியாற்றிய போலீஸ் படைகள் மற்றும் சிறப்பு குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
