புவனேஸ்வர்: ஒடிசாவில் நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட நக்சலைட்டுகள் 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து வன்முறையைக் கைவிட்டு, போலீசாரிடம் சரணடைந்தனர்.
நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுத்து உள்ளது.
நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையில், நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நக்சலைட்டுகள் சரணடையும் நிகழ்வுகளும் நடக்கிறது. அமைதி பாதையில் திரும்பும் நக்சலைட்டுகளுக்கு அரசு நிதி உள்ளிட்ட உதவிகளையும் செய்து கொடுக்கிறது.
அந்த வகையில் இன்று ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள புல்பானி போலீஸ் ஸ்டேஷனில் நக்சலைட்டுகள் 10 பேர் சரணடைந்தனர். அவர்களில் ஏழு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் போலீசாரிடம் ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். இன்று சரணடைந்த நக்சலைட்டுகள் 10 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1.15 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலவரப்படி, நபரங்காபூர், பலங்கிர், கோராபுட், மல்கன்கிரி, நுவாபாடா மற்றும் பவுத் மாவட்டங்கள் நக்சல் இல்லாதவையாக மாறிவிட்டன. கந்தமால், கலஹண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை நக்சல் இல்லாததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.
