நமது சிறப்பு நிருபர்
ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அதிமுகவை விடாமல் நடத்திக்கொண்டு இருக்கிறார் இபிஎஸ். சிற்சில சில்லறை சம்பவங்கள், எதிர்ப்புகள் எழுந்தாலும் அவற்றால் கட்சிக்கு எந்த ஆபத்தும் இதுவரை இல்லை. இதனாலேயே இபிஎஸ்சும் ஜெயலலிதாவுக்கு இணையாக உறுதியானவர், வலிமையானவர் என்று சொல்லிக்கொண்டு ஒரு கோஷ்டி கிளம்பி உள்ளது.
ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக முதல்வராகி, அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் பிடித்து, கவிழாமல் ஆட்சி நடத்தினார் இபிஎஸ். உண்மையில் அப்போது அந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கினார் இபிஎஸ்.
அப்போதும் கூட அவரது எதிர்ப்பாளர்கள், ‛‛மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜவை தாஜா செய்து எப்படியோ தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டார். அடுத்த தேர்தலின் போது இபிஎஸ் காணாமல் போய்விடுவார். அந்த நேரத்தில் கட்சியும் ஒற்றுமையாக இருக்காது; அவரால் கூட்டணியும் அமைக்க முடியாது” என்றனர் எதிர்ப்பாளர்கள்.
ஆனால், நிலைமையே மாறி விட்டது. இபிஎஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கிறது.இபிஎஸ் ஆதரவாளர்கள் இதுபற்றி கூறும்போது, ‛‛கட்சியை மட்டும் கட்டுக்கோப்பாக வைக்கவில்லை. கூட்டணியையும் தான் நினைத்தபடி அமைத்துவிட்டார். பாஜவின் நெருக்கடிக்கு ஆட்படாமல், அதிமுகவின் சாதகமான தொகுதிகளை தக்க வைத்துக்கொண்டார். பாஜ தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் அவர் மசியவில்லை.
இபிஎஸ்ஸிடம் பாஜ மடங்கிவிட்டது என்று அண்ணாமலை உள்பட உள்ளூர் பாஜ தலைவர்கள் புலம்பித் தள்ளுகின்றனர். இதுவே இபிஎஸ்ஸின் உறுதிக்கும் வலிமைக்கும் சாட்சி. ஜெயலலிதா இருந்தால் எப்படி நடந்திருக்குமோ அதே போல் இபிஎஸ்ஸூம் நடத்திக் காட்டி உள்ளார்” என்று சமூக வலை தளங்களில் சில மாற்றுக் கட்சியினர் கூட வியப்பை வெளிப்படுத்துகின்றனர். இதைவிட ஒரு படி மேலே போய், ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன், ‛‛இபிஎஸ்யின் உறுதி ஜெயலலிதாவை நினைவூட்டுகிறது.
ஜெ.,யின் வலிமை இவரிடமும் இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது” என்று பாராட்டித் தள்ளி உள்ளார். இதெல்லாம் சரி. ஜெயலலிதாவைப் போல் ஓட்டு வாங்குவாரா எனக் கேட்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள் இபிஎஸ்க்கு பயந்து பாஜ பதுங்கவில்லை. தமிழகத்தில் எப்படியாவது காலுான்ற வேண்டும் என்பதற்காகத் தான் பாஜ இவ்வளவு துாரம் இறங்கி வந்துள்ளது. இதை இபிஎஸ்சின் பலமாக நினைக்க வேண்டாம்.
தேர்தலுக்குப் பிறகு அதிமுக வாங்கும் ஓட்டுகளைப் பொறுத்து தான் இபிஎஸ்சின் ஆளுமையும் பலமும் பாராட்டப்படும் அல்லது விமர்சிக்கப்படும்” என்கின்றனர். ‘தேர்தல் களத்தில் நாலாபுறம் எதிரிகள் சூழ்ந்திருக்க, தன்னந்தனியாக கத்தி வீசிக் கொண்டிருக்கிறார் இபிஎஸ். அவரைப்பொறுத்தவரை, இந்த தேர்தல் ஒரு சத்திய சோதனை; எதிரிகள் குறி பார்த்திருப்பதை அறிந்து நிதானமாக களமாடுகிறார் இபிஎஸ். இந்த தேர்தல் ஒரு ஆடு புலி ஆட்டம் என்பது அவருக்கும் தெரியும். ஆடு யார், புலி யார் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லி விடும் என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.
