மும்பை,
“நடிகைகளை எளிதாகவும் நினைத்து விடாதீர்கள். யார் என்ன பேசினாலும் ‘ஐ டோன்ட் கேர்’ என்ற ரீதியில் நாங்கள் பயணிக்கிறோம். இது பயந்து அல்ல, தேவையில்லை என்ற ரீதியில் கடந்து செல்கிறோம்” என்றார்.
நடிகை கீர்த்தி சனோன்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோனுக்கு, பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரது துடிப்பான நடிப்பும், எடுப்பான ஆட்டமும் ரசிகர்களை கொண்டாடச் செய்து வருகின்றன. சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தும் இளசுகளை சூடேற்றி வருகிறார். 2021-ம் ஆண்டில் வெளியான ‘மிமி’ படத்துக்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. சமீபத்தில் வெளியான காக்டெயில்-2 படத்தில் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்ததாக இவர் மீது விமர்சனங்களும் எழுந்தன. ஆனாலும் விமர்சனங்கள் தாண்டி தனது திரைப்பயணத்தில் வெற்றிகரமாக பயணிக்கிறார்.
நடிகைகளை எளிதாக நினைக்க வேண்டாம்
இதற்கிடையில் நடிகைகளை யாரும் எளிதாக நினைக்க வேண்டாம் என்று கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “சினிமா என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. அது ஒரு பொக்கிஷம் போல. அந்த பொக்கிஷம் தனக்குவர்களை தானே தன் வளையத்துக்குள் இழுத்து வந்துவிடும். அப்படித்தான் நாங்கள் எல்லோருமே திரையுலகில் பயணிக்கிறோம். ஆனால் சினிமா என்றாலே இப்படித்தான்… நடிகைகள் என்றாலே அப்படித்தான்… என்று ஒரு பேச்சு சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே நிலவிக் கொண்டிருக்கிறது. நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் சினிமாவில் பிரச்சினைகளும், போராட்டங்களும் நிறைய உண்டு. அது பெரிய அளவில் யாருக்கும் தெரியவில்லை என்பது தான் வேதனையாக இருக்கிறது. இங்கு நடிகர்கள் எத்தனை வயது வரையிலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் நடிகைகளுக்கு அந்த விதி விலக்கு கிடையாது. திருமணம் என்றாலும், பிரசவம் என்றாலும் நடிகைகள் அவ்வளவு தான் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.
யார் என்ன பேசினாலும் ‘ஐ டோன்ட் கேர்’
வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை கடந்து சினிமாவில் சாதிக்க துடித்து வரும் நடிகைகளை தயவு செய்து யாரும் ஏளனமாக பார்க்க வேண்டாம். அதேவேளை எளிதாகவும் நினைத்து விடாதீர்கள். யார் என்ன பேசினாலும் ‘ஐ டோன்ட் கேர்’ என்ற ரீதியில் நாங்கள் பயணிக்கிறோம். இது பயந்து அல்ல, தேவையில்லை என்ற ரீதியில் கடந்து செல்கிறோம்” என்றார்.
