நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்ஸ்அப்பில் பிளாக் செய்த தாய் – மனம் திறந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

சென்னை,

‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்புப் பயணத்தின் தொடக்கத்தில் குடும்பத்தின் கடும் எதிர்ப்பை சந்தித்ததாக உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

‘மிஸ்டர் பச்சன்’ படத்தைத் தொடர்ந்து ‘காந்தா’, ‘கிங்டம்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட படங்களில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ், அந்தப் படங்கள் எதிர்பார்த்த வணிக வெற்றியை பெறாததால் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இருப்பினும், சமீபத்தில் வெளியான அவரது ‘லெனின்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘சேயோன்’ படத்தில் கதாநாயகி

‘லெனின்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.

குடும்பத்தின் எதிர்ப்பு

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், “நான் நடிக்கப் போவதாகச் சொன்னதும் என் குடும்பத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என் தாயிடம் பேசினேன், முடியாது என்றார். தந்தையிடம் கேட்டால், அம்மா வேண்டாம் என்கிறாளே என்றார். என் சகோதரியாவது ஆதரவு தருவாள் என்று நினைத்தால், அவளும் வேண்டாம் என்றாள். அனைவரும் எனக்கு எதிராகவே இருந்தனர். ஆனால், என் கனவை நான் கைவிட விரும்பவில்லை. அப்போது என் அம்மா என்னை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்துவிட்டார். சுமார் ஆறு மாதங்கள் என்னிடம் பேசவே இல்லை. என் அம்மா என்னை ஒரு நாள் நிச்சயம் பெருமையாக நினைப்பார் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டுமே முன்னோக்கி நகர்ந்தேன்.” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

பாக்யஸ்ரீ போர்ஸின் இந்த உருக்கமான அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

Source link