நீண்ட இடைவெளிக்கு பிறகு நடுத்தர வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளை குறிப்பாக கடன் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் இந்த கார்மேனி செல்வம். நடுத்தர வர்க்க குடும்பங்களில் நிலவும் கடன் பிரச்சனைகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் இந்த திரைப்படம் எந்த அளவு ஈர்ப்பை கொடுத்து இருக்கிறது?
ஆடம்பர வாழ்க்கையை ரசிக்கும் மற்றும் ஊதாரியாக இருக்கும் சமுத்திரகனி கௌதம் மேனனுக்கு கார் டிரைவராக வேலை பார்க்கிறார். வேலையில் நேர்மையானவராக இருக்கும் சமுத்திரக்கனி எப்படியாவது பணக்காரனாகி விட வேண்டும் என எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறார். இதனால் அவர் பல்வேறு இடங்களில் நிறைய கடன் வாங்க நேர்கிறது. அந்தக் கடனால் பல்வேறு அவமானங்களை இவர் குடும்பம் சந்திக்கிறது. அதனை சரி கட்ட சமுத்திரகனி வெளிநாடு செல்கிறார். சென்ற இடத்தில் அவர் நினைத்தபடி பணம் சம்பாதித்தாரா, இல்லையா? தன் கடன்களை அடைத்து நாடு திரும்பினாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
இந்த காலத்தில் இருக்கும் நடுத்தர குடும்பத்தின் சிக்கல்களும் அதற்காக அவர்கள் எடுக்கும் முடிவுகளும் அகலக்கால் வைப்பதும் அதனால் ஏற்படும் அவமானங்களும் என நடுத்தர குடும்ப சூழலை அப்படியே கண் முன் காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண் சக்ரி. இப்படத்தை அக்மார்க் சமுத்திரக்கனி படமாக பல அட்வைஸ்களை கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்து பின் விறுவிறுப்பாக நகர்ந்து இரண்டாம் பாதியில் இருந்து சில பல இடங்களில் வேகத்தடைகள் வந்து இறுதியில் ஒரு ஃபீல் குட் படமாக முடிந்திருக்கிறது. பல இடங்களில் நாடகத் தன்மை எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதே போல் சில இடங்களில் செயற்கைத் தனமான காட்சிகளும் வருகிறது. இவை படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்தாலும் சொல்ல வந்த விஷயமும் அதில் உள்ள கருத்தும் இக்கால கட்டத்திற்கு மிக அவசியமான கருத்தாக இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. கண்டபடி கடன் வாங்கினால் எந்த அளவு துன்பம் துயரம் ஏற்படும் என்பதை அப்படியே உண்மைக்கு நெருக்கமாக காட்டி பல குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி இந்த படத்தை கொடுத்திருப்பது சிறப்பு.
சமுத்திரகனி வழக்கம்போல் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை இந்த படத்திலும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். பல இடங்களில் அட்வைஸ் செய்கிறார் அது நன்றாக இருக்கிறது. சில இடங்களில் மட்டும் நாடகத் தன்மை தெரிகிறது. ஒரு குடும்பத் தலைவரை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் லட்சுமி பிரியா அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். கௌதம் மேனன் – அபிநயா தம்பதிகள் சிறப்பான முறையில் பாசிட்டிவாக நடித்து கவனம் பெற்று இருக்கின்றனர். முக்கிய பாத்திரத்தில் வரும் முல்லை கோதண்டம் தங்களுக்கு என்ன வருமோ அதை சிறப்பான முறையில் செய்து ரசிக்க வைத்திருக்கின்றனர். சிறுவன் கரம் சக்கரவர்த்தி சின்ன சின்ன முகபாவனைகளில் கவர்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.
யுவராஜ் தர்ஷன் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராகவ் ரமேஷ் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை நேர்த்தியாக இருக்கிறது. நடுத்தர வாழ்வில் அகலக்கால் வைத்து கண்டபடி கடன் வாங்கினால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை அப்படியே வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பது சிறப்பு. வெளிநாடு வாழ்வும் வேலையும் எந்த அளவு சிரமம் என்பதையும் உண்மைக்கு நெருக்கமாக காட்டி இருப்பதும் சிறப்பு. இருந்தும் படத்தின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம்.
கார்மேனி செல்வம் – அவசியமானவன்!
