தொகுதிக்குள்ளேயே இரண்டு கோஷ்டிக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். யாருக்கு சீட் கிடைக்கப் போகிறதென பார்ப்போம் என முறுக்கிக் கொண்டு நின்றனர். தலைவரின் காரையே மறித்ததால் அஜிதாவுக்கு சீட் இருக்காது என சாமுவேல் உறுதியாக நம்பினார். அதற்கேற்றார் போல 10-15 நாட்களுக்கு முன்பாக பனையூரிலிருந்து சாமுவேலுக்கு அழைப்பு வந்தது. சீட் கிடைக்கப்போகிறதென உற்சாகமாக கிளம்பிச் சென்றார் சாமுவேல். ஆனால் பொதுச்செயலாளர் கூப்பிட்டு ‘தளபதியின் நண்பர் தூத்துக்குடியில் நிற்கிறார். தளபதியே நிற்பதைப் போல நினைத்து வேலைப் பாருங்கள்’ எனக் கூற உடைந்தே விட்டார். இரண்டு மூன்று நாட்கள் சென்னையில் தங்கியிருந்து யார் யாரையோ பார்த்து பேசியும் எதுவும் வேலைக்காகவில்லை என்கிற விரக்தியில் ஊருக்கு திரும்பிவிட்டார்.

இன்னொரு பக்கம் அஜிதாவும் 10 நாட்களாக சென்னையில் முகாமிட்டு யாரையும் சந்திக்க முடியாமல் இன்று காலைதான் தூத்துக்குடிக்கு கிளம்பினார்’ என்கின்றனர் விவரமறிந்தவர்கள். மேலும் பேசுபவர்கள், ‘அஜிதா தொகுதிக்குள் படோபடமாக விளம்பரம் செய்து நிகழ்ச்சிகளை நடத்த மட்டும் ஒன்றரை ஆண்டில் ஒன்றுக்கும் மேல் வைட்டமின்களை செலவளித்திருப்பார். சாமுவேல் போஸ்டிங்குக்காக மட்டுமே முக்கியஸ்தர்களை பலமாக கவனித்திருக்கிறார். இருவரும் எக்குத்தப்பாக செலவளித்துவிட்டு இப்போது தலையில் துண்டோடு பாவமாக நிற்கின்றனர். ஸ்ரீநாத்துக்காக இவர்கள் வேலை செய்வார்களா என்பதே சந்தேகம்தான்’ என்றனர்.
நண்பருக்கு சீட் கொடுத்ததில் விஜய் மகிழ்ச்சி; ஆனால் களத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இல்லையோ என்ற நிலை தான் இப்போது உள்ளது!
