நமது சிறப்பு நிருபர்
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து 9வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதேநேரத்தில் பட்டியலில் இந்தியா 116வது இடத்தில் உள்ளது.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இது இருந்தால் மட்டுமே பல்வேறு சாதனைகளை படைத்து முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு பல்கலையின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2026ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
சர்வதேச மகிழ்ச்சி தினம் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
மகிழ்ச்சியான பின்லாந்து
இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், முதலிடம் பெற்ற நாடான பின்லாந்து 7.76 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றது.தொடர்ந்து 9வது ஆண்டாக இந்த தகுதியை பின்லாந்து பெற்றுள்ளது. பட்டியலில் இந்தியா 116வது இடத்தில் உள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் 118வது இடத்தில் இருந்த நிலையில் நடப்பாண்டு இரண்டு இடங்கள் இந்தியா முன்னேறி உள்ளது.
டாப் 25 நாடுகள்!
மகிழ்ச்சியான நாடுகளின் டாப் 25 பட்டியல் பின்வருமாறு:
1. பின்லாந்து,
2. ஐஸ்லாந்து,
3.டென்மார்க்,
4.கோஸ்டாரிகா,
5. சுவீடன்,
6. நார்வே,
7. நெதர்லாந்து,
8.இஸ்ரேல்,
9.லக்சம்பர்க்,
10.சுவிட்சர்லாந்து,
11.நியூசிலாந்து,
12.மெக்சிகோ,
13.அயர்லாந்து,
14.பெல்ஜியம்,
15. ஆஸ்திரேலியா,
16. கொசோவோ,
17. ஜெர்மனி,
18. ஸ்லோவேனியா,
19. ஆஸ்திரியா,
20.செக் குடியரசு,
21. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,
22. சவுதி அரேபியா,
23. அமெரிக்கா,
24. போலந்து,
25. கனடா.
கடந்த ஆண்டு வெளியேறிய சுவிட்சர்லாந்து, இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் 10வது இடத்தைப் பிடித்து மீண்டும் நுழைந்துள்ளது.மற்ற இடங்களில், கொசோவோ (16வது இடம்), சுலோவீனியா (18வது இடம்) மற்றும் செக்கியா (20வது இடம்) போன்ற நாடுகள் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் அடைந்துள்ளன.
அதேபோல், உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளில் டாப் 10 பட்டியலில், ஆப்கானிஸ்தான், மலாவி, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெபனான், எகிப்து, தான்சானியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.
