நமது சிறப்பு நிருபர்எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சொந்தக் கட்சிக்குள்ளேயே ‛‛குடைச்சல்''

நமது சிறப்பு நிருபர்

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சொந்தக் கட்சிக்குள்ளேயே ‛‛குடைச்சல்” கொடுக்கும் குட்டித் தலைவர்கள் அதிகரித்துள்ளது, கட்சிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. முன்பு ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் ஆளுமையுடன் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் எதற்கும் மூச்சுக் காட்ட மாட்டார்கள்”. கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும் வாலைச் சுருட்டிக்கொண்டு அப்படியே கேட்பார்கள்.

அவர்களுக்குப் பிறகு குட்டி ராஜாக்களுக்கு குளிர் விட்டுப்போயிடுச்சு போல. ‛‛சீட் கிடைக்காவிட்டால் சீறுவதும், பதவி கிடைக்காவிட்டால் பக்கத்து கட்சிக்கு பறப்பதும் என்று ‛‛சீன்” போடுகிறார்கள்.

உதாரணமாக, பாஜவுக்குள்ளே முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவு கூட்டம் ஒன்று தனி கூட்டம் போட்டு கோவையில் ஆலோசனை செய்துள்ளது. ‛‛அண்ணாமலைக்கு சீட் தரவில்லை என்றால் அதிமுக – பாஜ கூட்டணியை தோற்கடிக்க வேலை செய்வோம்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். கட்டுக்கோப்பான கட்சி என இந்தியா முழுவதும் பெயரெடுத்த பாஜவிலேயே இப்படி கலகக் குரல் எழுந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

‛‛ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ஓபிஎஸ்ஸூடன் திமுகவில் சேர்ந்தார். தனக்கு உசிலம்பட்டியில் மீண்டும் போட்டியிட ஓபிஎஸ் ‛‛சீட்” வாங்கித் தரவில்லை என்று கலகக் குரல் எழுப்பி உள்ளார். தவெக-வில் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா, தனக்கு துாத்துக்குடியில் கட்சிப் பொறுப்பு கொடுக்கவில்லை என்று எதிர்ப்பு குரல் கொடுத்துக்கொண்டு இருந்தவர், ‛‛சீட்”டும் இல்லை என்றதும் கலகக் குரல் எழுப்புகிறார்.

மேட்டுப்பாளையத்தில் சீட் கிடைக்காததால் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த திமுக ஒன்றிய செயலாளர் தனசேகரன் என்பவருக்கு ‘சீட்’ மறுக்கப்படவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், சீட் கிடைக்காமல் போனதற்கு திமுக எம்.பி., ஆ.ராஜா தான் காரணம் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

சீட் கிடைக்காமல் விரக்தியில் உள்ள தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, தி.நகர் தொகுதி எம்,எல்.ஏ., கருணாநிதி ஆகியோரை, அக்கட்சி எம்.பி., ஆ.ராஜா சந்தித்து, சமாதானம் செய்து வெளியே போகாமல் இறுக்கிப் பிடித்து வைத்துள்ளார். இதில் தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவை சந்தித்து அழுதார்.

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்ற ஜி.கே.வாசனின் த.மா.கா, இரட்டை இலைக்கு பதிலாக தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாவட்ட தலைவர்களான வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர்.

இப்படி சில குட்டி ராஜாக்கள் செய்யும் அட்டகாசம், கட்சிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இப்படியே போனால் எதிர்காலத்தில் கட்சி நடத்துவது கூட கஷ்டமாகிவிடும் போல என்று அரசியல்வாதிகள் புலம்புகின்றனர்.

Source link