நமது சிறப்பு நிருபர்கடந்த 2021ல் கொடுத்த தொகுதிகளை காட்டிலும் குறைவாகத் தான் தருவோம் என்ற திமுகவின் முடிவு,

நமது சிறப்பு நிருபர்

கடந்த 2021ல் கொடுத்த தொகுதிகளை காட்டிலும் குறைவாகத் தான் தருவோம் என்ற திமுகவின் முடிவு, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேஜ கூட்டணியுடன் கூட்டணி வைக்க விஜய் கட்சி ஆலோசித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை.

காங்கிரஸ், மதிமுக மற்றும் சில சிறு கட்சிகளுக்கு மட்டுமே தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்படவில்லை. கடந்த முறை தலா 6 தொகுதிகள் தரப்பட்ட இம்மூன்று கட்சிகளுக்கும், இந்த முறை தலா 4 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் மூன்று முறை பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதனால் கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். வழக்கமாக வெளிப்படையாக பேசக்கூடிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ‘திமுக செய்வது நியாயமில்லை’ என்று தன் கருத்தை இன்று (மார்ச் 14) தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கையை எங்கள் மாநிலக்குழு முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாநில செயலாளராக புதியவர் வீரபாண்டியன் பொறுப்பில் இருக்கிறார். பழைய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை மடக்கியதுபோல, இவர்களை பேசி சரிக்கட்ட முடியாமல் திமுக தலைமை திணறி வருகிறது.

தங்களுக்கு திருப்தி கரமான எண்ணிக்கையில் தொகுதிகளை திமுக தரவில்லை என்றால், பழையபடி மக்கள் நலக்கூட்டணி தொடங்கும் முடிவை கூட, கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் வாய்ப்புள்ளதாக, கோபத்தில் கொந்தளிக்கும் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

சண்முகம் பேட்டி

இது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் இன்று கூறியதாவது: காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் தர முடியும் என்றால் எங்களுக்கும் தர வேண்டும்; எங்களுக்கு தர முடியாது என்பதில் நியாயமில்லை. திமுகவுடன் தொடர்ந்து பேச்சு நடக்கிறது. என்ன செய்வது என்பதை எங்கள் தேர்தல் குழு முடிவு செய்யும். இவ்வாறு சண்முகம் கூறியுள்ளார்.

திக்…திக்…நிலை!

எல்லா திசைகளிலும் கூட்டணி பேரம் பேசி விட்டு வந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து, சட்டசபை தொகுதிகளையும் அள்ளிக்கொடுத்த திமுக, கொள்கைக்காக கூட்டணி வைக்கும் தங்களுக்கு குறைக்கக்கூடாது என்று வி.சி., மற்றும் கம்யூ., நிர்வாகிகளின் வாதம். ‘திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொகுதிகளை குறைத்துக் கொள்ளலாம்.

தேமுதிக போன்ற ஒரு கொள்கையற்ற மூன்றாம் தர கட்சியை அவர்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதற்காக, நாங்கள் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கொந்தளிக்கின்றனர். ஏற்கனவே விஜய் கட்சியுடன் பாஜ பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கம்யூ., வி.சி.,க்களின் முறுக்கல், அறிவாலய வட்டாரத்தில் திக்…திக்… நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link