நமது சிறப்பு நிருபர்
கூட்டத்திற்கு கூட்டம் ‛‛மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‛‛பியூஸ் கோயல் அவர்களே, பாஜ ஆளும் மாநிலங்களைப் பாருங்க. அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கீங்க. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கொடுத்திருக்கீங்க. அப்போ தான் தமிழ்நாட்டை நீங்கள் எவ்வளவு வஞ்சிக்கிறீங்கன்னு தெளிவா புரியும்.
தமிழ்நாட்டு கடன் பத்தி பேசி இருக்கீங்களே. இன்று உங்களுக்கு ஒரு சேலஞ்ச் பண்றேன். தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுக்கிற ஒரு ரூபாய்க்குப் பதிலா திரும்ப எங்களுக்கு எவ்வளவு கிடைக்குது. அதுவே பாஜ ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்குது.
இந்த கம்பேரிசனை வெளிப்படையா அறிவிக்க உங்களால் முடியுமா. சொன்னா உங்க குட்டு வெளிப்பட்டு விடும்” என்றார். ஆனால் உண்மை நிலவரம் என்ன? மத்திய வருவாயில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு கொடுப்பார்கள் என்ற தகவல் பொதுவெளியிலேயே கிடைக்கிறது.
1989-1995ல் 9வது நிதி கமிஷனின்போது தமிழகத்திற்கு 7.931%, 1995-2000ம் வரை 10வது நிதி கமிஷனின் போது 6.637%, 2000-2005ல் 11வது நிதி கமிஷனின் போது 5.385%, 2005-2010ல் 12வது நிதி கமிஷனின் போது 5.305% 2010-2015ல் 4.696%, 2015-2020ல் 14வது நிதி கமிஷனின் போது 4.023%, 2021-2026ல் 4.079% தரப்பட்டுள்ளது. 2026-27 நிதி ஆண்டுக்கு தமிழகத்திற்கு ரூ.87 ஆயிரம் கோடி கொடுத்துள்ளனர்.
பாஜ ஆளும் மாநிலமாக இருந்தாலும் உ.பி., ஒரு பின் தங்கிய மாநிலம். அதற்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 4.09% நிதி பகிர்வு தரப்பட்டுள்ளது. உ.பி.,க்கு 17.6% தரப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது ஸ்டாலின் சொல்வது சரி என்பது போல் தெரியும்.
ஆனால் மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டுகள் திமுக அங்கம் வகிக்கும்போது தமிழகத்திற்கு எவ்வளவு தரப்பட்டது. அப்போது தமிழகத்திற்கு 2013-14 நிதி ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 600 கோடி தரப்பட்டது. அதுவே உ.பி.,க்கு ரூ.94 ஆயிரத்து 500 கோடி தரப்பட்டது. அதாவது தமிழகத்திற்கு 4.9%, உ.பி.,க்கு 19.6% தரப்பட்டது.
காங்., உடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, தமிழகத்தை விட நான்கு மடங்கு அதிகமாக உ.பி.,க்கு நிதி தரப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசை குற்றம் சுமத்தும் திமுக, அப்போது என்ன செய்துகொண்டு இருந்தது. அன்று உ.பி.,.க்கு கொடுத்தது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா.
இன்னும் சொல்லப் போனால் அப்போது கொடுக்கப்பட்டதை விட இப்போது உ.பி.,க்கு குறைவாகத் தான் கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வு என்பது மக்கள் தொகை அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. ஆனால் தங்களுக்கு வசதியாக இந்த விஷயத்தை திமுக மறைத்து விடுகிறது.
தமிழகத்தை விட உ.பி., மக்கள் தொகை 3 மடங்கு அதிகம். இது பற்றி மேடையில் திமுக தலைவர்கள் மூச்சே விடுவதில்லை. 2026-31க்கான நிதி கமிஷனில் உ.பி.,க்கு 17.62%, பீகாருக்கு 9.95%, மேற்கு வங்கத்திற்கு 7.22% நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது. இதில் நாட்டிலேயே அதிக நிதி பகிர்வில் மேற்கு வங்கம் 3ம் இடம் பிடித்துள்ளதை கவனிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பது பாஜவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு இருக்கும் மம்தா அரசு. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பாஜ அரசு ஓர வஞ்சனை செய்வதாக இருந்தால் மேற்கு வங்க அரசுக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும். பின் தங்கிய மாநிலங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர, இதில் எந்த அரசியலும் இல்லை என்பதை இதை வைத்தே புரிந்துகொள்ளலாம்.
இன்னொரு முக்கிய புள்ளி விபரத்தை சொன்னால் இன்னும் கொஞ்சம் புரியும். இதே நிதி கமிஷனில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பகிர்வு 4.10%. குஜராத்திற்கு ஒதுக்கப்பட்டது 3.76% மட்டுமே. அதாவது, பாஜ ஆளும் குஜராத்திற்கு தமிழகத்தை விட குறைவாக நிதி பகிர்வு செய்யப்படுகிறது.
உண்மையில் மத்திய பாஜ அரசு ஓர வஞ்சனையுடன் நடந்துகொண்டு இருந்தால், எதிர்க்கட்சியான திமுக ஆளும் தமிழகத்தை விட குறைவாக தங்கள் கட்சி ஆளும் குஜராத்திற்கு எப்படி நிதியை ஒதுக்கும். இதில் இருந்தே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலத்திற்கு குறைவாகவும் அதை விட பின் தங்கிய மாநிலத்திற்கு அதிகமாகவும் நிதி பகிர்வு தரப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
