நமது சிறப்பு நிருபர்
சட்டசபை தேர்தலில் தவெக சார்பி்ல் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களில் பெரும்பகுதியினர், ‘5 கோடி ரூபாய் செலவு செய்ய முடியுமா’ என்ற கேள்விக்கு முடியாது என்று கூறி விட்டனர். இதுவே, கூட்டணி வைக்கும் எண்ணத்துக்கு அந்த கட்சியை தள்ளியிருப்பதாக, நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தினார். 60 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடி செலவாகும். அதை செய்ய முடியுமா என்று மனு கொடுத்தவர்களிடம் விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும் கேட்டனர். ஆனால், மனு கொடுத்த பலரும், தங்களால் முடியாது என்று கூறி விட்டனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம். ஆனால், உண்மையான செலவு அதை விட பல மடங்கு ஆகும். அந்த பணம் இருக்கிறதா என்று விஜய் கேட்டவுடன் மனு கொடுத்தவர்கள், ஜகா வாங்கி விட்டனர்.இதன்பிறகே, தனித்துப் போட்டியிடுவது எத்தனை துாரம் சாத்தியமற்றது என்பது விஜய்க்கு தெரியவந்துள்ளது.
இதன் பிறகே ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளிடம் கூட்டணி வைப்பது பற்றி கருத்து கேட்டுள்ளார். இதில் 90 சதவீதம் மாவட்ட தலைவர்கள் கூட்டணிக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இது குறித்து கட்சி தலைவர் விஜயிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், கூட்டணி வைப்பது பற்றி விஜய் தீவிரமாக சிந்திப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
இது பற்றி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் தரப்பில் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
