நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் உள்ள சாதாரண ‛‛துக்கடா'' கட்சிகள் முதற்கொண்டு அதிமுக, திமுக போன்ற பெரிய

நமது சிறப்பு நிருபர்

தமிழகத்தில் உள்ள சாதாரண ‛‛துக்கடா” கட்சிகள் முதற்கொண்டு அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் கூட எளிதாக வேட்பாளர்களை தேர்வு செய்து விடுகின்றன. ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகள் மட்டும் வேட்பாளர்களை தேர்வு செய்து காலாகாலத்தில் அறிவிக்க முடியாமல் திக்கித் திணறி, மற்ற கட்சிகளின் முன்னால் ‛காமெடி’ கட்சிகளாக காட்சி அளிக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்று அலசிப் பார்த்தால், இந்த இரு கட்சிகளையும் இயக்கும் ‛‛ரிமோட் சுவிட்ச்” டில்லியில் இருப்பது தான்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாநில தலைவர்கள் தனியாக இருக்கிறார்கள். பொதுச் செயலாளர், இணை பொதுச்செயலாளர் என்று பதவிகளுக்கெல்லாம் குறைச்சலே இல்லை. ஆனால் என்ன பயன். இவர்களுக்கு என்று தனியாக எந்த ‛‛பவரும்” இல்லை. 2 இட்லி கூட சாப்பிட வேண்டும் என்றாலும் டில்லிக்கு போன் செய்து கேட்க வேண்டும். அந்த நிலைமையில் தான் செல்வபெருந்தகையும் நயினாரும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு தான் தமிழகத்தின் உண்மையான கள நிலவரம் தெரியும். டில்லியில் இருப்பவர்களுக்கு கள நிலவரம் தெரியாது. ஆனால், தமிழகத்தில் இருந்து டில்லிக்கு பறக்க விடப்படும் மொட்டை ‛‛பெட்டிஷன்”களில் எழுதப்பட்ட விஷயங்கள் தான் உண்மை என்று நினைப்பார்கள். மொட்டை பெட்டிஷன் எழுதுவோர் எல்லாம் கட்சியின் நலனுக்காகவே உயிர் வாழ்பவர்கள்; மற்றவர்கள் எல்லாம் உயிரை எடுப்பவர்கள் என்பது டில்லி தலைவர்களின் நினைப்பு.

அது மட்டுமா? டில்லியில் இருந்து தமிழகம் வரும்போதெல்லாம் இங்கிருக்கும் ‛‛துக்கடா” தலைவர்கள் கவனிக்கும் கவனிப்பில் திக்குமுக்காடும் டில்லிவாலாக்கள், அங்கு சென்றதும் தங்களை ‛‛சிறப்பாக” கவனித்தவர்களை சப்போர்ட் செய்வார்கள். இதனால் டில்லியிலும் குழப்பம் ஏற்படும்.

ஆளாளுக்கு ஒருவரை சிபாரிசு செய்வதால், யாரை திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் முழிக்கும் டில்லி தலைமை, ‛‛தலையை பிய்த்துக்கொண்டு” வேட்பாளர் பட்டியல் தயாரிப்பை ‛‛பெண்டிங்” போட்டுவிடும். இது போன்ற காரணங்களால் தான் இந்த இரு தேசிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் ‛‛சிலிண்டர்” இல்லாத டீக்கடை போல் ‛‛காத்து வாங்குது”. மாநில தலைவர்களுக்கு ‛‛பவர்” கொடுக்காதவரை இப்பிரச்னைக்கு முடிவே இல்லை.

Source link