நமது சிறப்பு நிருபர்தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார ஸ்டைல், ஓட்டுக்களை பெற்றுத் தருமா அல்லது மற்ற

நமது சிறப்பு நிருபர்

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார ஸ்டைல், ஓட்டுக்களை பெற்றுத் தருமா அல்லது மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்ச் 30ம் தேதி தமிழக தேர்தல் வேட்பு மனு ஆரம்பம் ஆனது. அன்றே படுவேகத்தில் சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் விஜய். சில கட்சிகளில் வேட்பாளர்களே அறிவிக்கப்படாதபோது விஜய் காட்டிய வேகம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. உண்மையில் ‛‛சீரியசாக” அரசியல் செய்வார் போலவே என்ற கருத்தை ஏற்படுத்தியது.

எல்லாம் கொஞ்சம் நேரம் தான். அதன் பிறகு காட்சியே மாறியது. பெரம்பூரிலும் கொளத்துாரிலும் மதியம் வரை பிரசாரம் செய்த விஜய், திடீரென பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பனையூர் வீட்டுக்கு திரும்பி பதுங்கிக்கொண்டார். அங்கிருந்து ஒரு அறிக்கை மட்டும் வந்தது. ‛‛போலீசார் போதிய பாதுகாப்பு கொடுக்காததால் பிரசாரத்தை ரத்து செய்கிறேன்” என்று விஜய் அறிவித்தார். ‛‛சரி போனால் போகுது, மறுநாளாவது பிரசாரம் செய்ய வருவார்” என விஜய் ரசிக கண்மணிகள் காத்திருந்தனர். மறுநாளும் போச்சு, அதற்கு அடுத்த நாளும் போச்சு.

அதாவது ஏப்.1 வரை இப்படியே ஓடிப்போச்சு. திடீரென ஏப்.2ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்த விஜய், திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, அங்கேயே பிரசாரமும் செய்தார். அப்போதாவது தங்களையும் அழைத்து வாக்காளர்களுக்கு விஜய் அறிமுகம் செய்து வைப்பார் என அவரது கட்சி வேட்பாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்படிப்பட்ட சம்பவத்திற்கெல்லாம் விஜய் இடம் கொடுக்கவில்லை.

தவெக வேட்பாளர்களை ‛‛அம்போ”வென விட்டு விட்டு சென்னைக்கு பறந்தார். அதன் பிறகு விஜய்யிடம் இருந்து பிரசாரம் பற்றிய எந்த தகவலும் இல்லை. ‛‛விஜய் பாணி வித்தியாசமான பாணி”யாக இருக்கிறதே. நமக்கு இது நல்லது தான்” என்று சந்தோசப்படுகின்றனர் மற்ற கட்சி வேட்பாளர்கள். ஏற்கனவே ஆண்ட கட்சி, இப்போது ஆளும் கட்சிக்கு மாற்றாக வருவேன் என்று கூறும் விஜய், பிரசாரத்திலும் அவர்களுக்கு மாற்றாக இருக்க வேண்டாமா என அவரது ரசிகர்கள் கேட்கின்றனர்.

Source link