நமது சிறப்பு நிருபர்வரும் 2026-27ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று

நமது சிறப்பு நிருபர்

வரும் 2026-27ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:

* சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருட்காட்சியகம்ல எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாடு அருங்காட்சியகம் ரூ.287 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.

* தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

* தூய்மை பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

* தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ.327 கோடியில் பணிகள் நடக்கின்றன. மதுரை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ.229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

* அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

* சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* 19 முக்கிய கோவில்களில் ரூ.1,770 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

* 2024ம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழகம் வந்துள்ளனர்.

* 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை புனரமைத்து பாதுகாக்கும் நோக்கில் அரசு நிதி ரூ.425 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 84 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.

* இந்தியாவிலேயே முதல் முறையாக தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.214 கோடியில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

* மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி மானியங்கள் ரூ.24 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

* வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

* மாநில அரசின் கடன் 2026-27ம் நிதியாண்டில் 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். நடப்பாண்டில் கடன் ரூ.9.52 லட்சம் கோடியாக இருக்கிறது. வருவாய் பற்றாக்குறை, 69 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

* பொங்கல் பரிசு, மகளிர் உரிமை தொகை திட்டத்தால் அரசுக்கு ரூ.10,849 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

புதிய திட்டங்கள் இல்லை!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுவாக, இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும். இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். எனவே, இடைக்கால பட்ஜெட்டில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link