– நமது சிறப்பு நிருபர் – தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23ல் ஒரே கட்டமாக தேர்தல்

– நமது சிறப்பு நிருபர் –

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23ல் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டசபை களுக்கு ஒரே கட்டமாக ஏப்., 9ம் தேதியும், மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதி என இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, வடகிழக்கு மாநிலமான அசாம், யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய ஐந்து சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆய்வு நடத்தி வந்தது.

பீஹாரை தொடர்ந்து தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை நியாயமாக நடத்தும் வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தி, இறுதி வாக்காளர் பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

வெளியிட்டார்

இதன் தொடர்ச்சியாக, ஐந்து சட்டசபைகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் டில்லியில் நேற்று வெளியிட்டார். அப்போது, தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரும் உடனிருந்தனர்.

முதலில், 126 தொகுதிகள் கொண்ட வடகிழக்கு மாநிலமான அசாம், 140 தொகுதிகள் கொண்ட நம் அண்டை மாநிலமான கேரளா, 30 தொகுதிகள் கொண்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று சட்டசபைகளுக்கும், வரும் ஏப்ரல் 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்., 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமான ஏப்., 23ல் 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்., 29ல் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்பின், நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பதிவான ஓட்டுகள், மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

ஜனநாயக திருவிழா

இந்த தேர்தல் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் நேற்று கூறியதாவது: நம் நாட்டின் பெருமைமிகு ஜனநாயக திருவிழா அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடக்க உள்ளது. இதில், மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தோராயமாக 2.19 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் பணிகளில், 25 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர்.

17.4 கோடி வாக்காளர்கள் என்பது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா, ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஈடானது. இந்த ஜனநாயக திருவிழாவை காண, 20 நாடுகளின் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நம் நாட்டிற்கு விருந்தினர்களாக வரவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தும் வகையிலும், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையிலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மத்திய பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

தமிழகத்தில் நடக்கவுள்ள தேர்தலுக்காக, மொத்தம் 75,032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், நகர்ப்புறங்களில் 30,967 ஓட்டுச்சாவடிகள்; ஊரக பகுதிகளில் 44,065 ஓட்டுச்சாவடிகள் அமையவுள்ளன. ஒரு ஓட்டுச்சாவடியில், சராசரியாக 756 வாக்காளர்களுக்கு ஓட்டு இருக்கும். சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Image 1549340

மேற்கு வங்கத்தில் 2 கட்டம் ஏன்?

மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2001 மே 10ல் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. பின் 2006 ல் 5, 2011ல் 6, 2016ல் ஏழு கட்டங்களாகவும் நடத்தப்பட்டது. கடந்த 2021ல் கொரோனா தொற்று பரவலுக்கு இடையே, எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. இம்முறை இரண்டு கட்டங்களாக குறைக்கப்பட்டது குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ”அனைவரின் வசதிக்காக, இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப் படுகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில் இரண்டு நாட்கள் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, தேர்தலை பல கட்டங்களாக நடத்துவது, அரசியல் கட்சியினருக்கு கூடுதல் செலவை ஏற் படுத்துவதுடன், வாக்காளர்களுக்கும் ஓட்டு போடுவதில் சலிப்பை ஏற் படுத்துவதாக பல்வேறு அரசியல் கட்சியினரும், தெரிவித்தனர். மேலும், மே, 7ல் மேற்கு வங்க சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதால், அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எட்டு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல்

கோவாவின் பான்டா, கர்நாடகாவின் பகல்காட், தவண கரே தெற்கு, நாகாலாந்தின் கொரிடாங், திரிபுராவின் தர்மாநகர், குஜராத்தின் உம்ரத், மஹாராஷ்டிராவில் பாராமதி, ரஹூரி ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க் களாக இருந்தவர்கள் மரணம் அடைந்ததை அடுத்து, அந்த தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில், ஏப்., 9 ம் தேதியும், குஜராத், மஹா.,வில் ஏப்., 23லும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை மே 4ல் நடை பெறும்.

39 நாட்கள் இடைவெளி

* தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தல் தேதி, 2021 பிப்ரவரி 26ல் அறிவிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு ஏப்ரல் 6ல் நடந்தது. இடைவெளி நாட்கள் 39. தற்போது, நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ல் நடக்க உள்ளது. இம்முறையும் இடைவெளி நாட்கள் 39
* 2021ல் ஓட்டுப்பதிவு முடிந்து, 26 நாட்களுக்கு பின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இம்முறை, 11 நாட்களில் முடிவுகள் வெளியாகும்
* தமிழகத்தில் கடந்த முறை மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,28,23,749. இம்முறை, 5,67,74,436 வாக்காளர்கள் உள்ளனர். அதாவது, 60,49,313 வாக்காளர்கள் குறைவு
* அசாமில் கடந்த முறை இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. இம்முறை ஒரே கட்டமாக நடக்கிறது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக நடந்தது. இம்முறை இரு கட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது
* தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கடந்த முறை ஒரே நாளில் ஓட்டுப் பதிவு நடந்தது. இம்முறை புதுச்சேரி, கேரளாவில் ஒரே தேதியிலும், தமிழகத்தில் வேறு தேதியிலும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

Source link