– நமது சிறப்பு நிருபர் -:
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரசை வீழ்த்த எதிர்க்கட்சியான பா.ஜ., பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இது, தேர்தலில் வெல்ல அக்கட்சிக்கு உதவுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
ஏப்., 23ல், 152 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்., 29ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மே 4ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
கடந்த 2011, 2016, 2021 என மூன்று முறை சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த முறை நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.,வும் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.
நடவடிக்கை
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், மேற்கு வங்க அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர், போலீஸ் டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளை கூண்டோடு மாற்றி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிரடி நடவடிக்கை.
இந்நிலையில், சிம்ம சொப்பனமாக விளங்கும் முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிட, பா.ஜ.,வினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசை போலவே பா.ஜ., வின் வளர்ச்சியும் அபரிதமானது.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வென்ற பா.ஜ., 2021 தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை கண்டு, 77 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியானது.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்டவற்றில் பா.ஜ., அல்லது அதன் கூட்டணி ஆட்சி நடக்கின்றன.
இந்த மாநிலங்களில் காங்கிரசின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி பா.ஜ., தன் செல்வாக்கை நிலைநாட்டி உள்ளது.
தவிர, 2024ல், ஒடிஷாவில், 25 ஆண்டு கால நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் ஆட்சிக்கும் பா.ஜ., முடிவுரை எழுதியது.
இது போல மேற்கு வங்கத்திலும் ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., அயராது உழைத்து வருகிறது. ஆனால் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி.
காரணம், திரிணமுல் காங்கிரசை வீழ்த்துவது அவ்வளவு எளிதானதல்ல. அடிமட்டத்தில் இருந்து அக்கட்சியை வீழ்த்தினால் மட்டுமே அது சாத்தியம். அதற்கான அனைத்து பணிகளையும், பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா செய்து வருகிறார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., சார்பில் அதிகாரப்பூர்வ தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பூபேந்திர யாதவை, மேற்கு வங்கத்தின் தேர்தல் பொறுப்பாளராக கடந்த அக்டோபர் மாதமே பா.ஜ., தலைமை நியமித்து விட்டது.
இவர், குஜராத், ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றியவர்.
எதிர்ப்பு
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசின் வலுவான உள்ளூர் எதிர்ப்பு, பா.ஜ.,வுக்கு சவாலாக உள்ளது.
முதல்வர் மம்தாவை போல், உள்ளூர் மக்களை கவரக்கூடிய தலைவர் இல்லாததும் அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தவிர, மேற்கு வங்கத்தின் பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் மக்களின் தீவிர அரசியலும் பா.ஜ.,வின் வெற்றிக்கு இடையூறாக உள்ளன.
மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் பா.ஜ., தலைவர்கள், தனிப்பட்ட தாக்குதல் என்ற உத்தியை பயன்படுத்தாமல், மத்திய அரசின் திட்டங்களும், மற்ற மாநிலங்களில் பா.ஜ., அரசின் செயல்பாடுகளையும் பட்டியலிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியும் தன் பிரசாரத்தில், முதல்வர் மம்தாவின் பெயரை கூட சொல்லவில்லை.
இந்த முறை தனிமனித தாக்குதல்களை கைவிட்டு, மாநில அரசின் சீர்கேடுகள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்டவற்றில் பா.ஜ.,வினர் கூ டுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 15 ஆண்டு களாக ஆட்சியில் உள்ள திரிணமுல் காங்கிரசின் செயல்பாட்டை விமர்சித்து, அக்கட்சிக்கு எதிரான மனநிலையை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பா.ஜ., காய் நகர்த்தி வருகிறது.
திரிணமுல் காங்., ஆட்சியில் அரங்கேறும் ஊழல், வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்னைகளையும் அக்கட்சி பூ தாகரமாக்கி வருகிறது.
ஊழல், வன்முறை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை மக்களிடையே எடுத்துச்செல்லும் முயற்சியாக, பா.ஜ., சார்பில் மாநிலம் முழுதும் யாத்திரை நடந்தது.
இது போன்ற வியூகங்களால், இந்த முறை வெற்றி பெற்று விடலாம் என பா.ஜ.,வினர் கருதுகின்றனர். மேற்கு வங்கத்தில் ஆலமரமாக உள்ள திரிணமுல் காங்கிரசை பா.ஜ., வீழ்த்துமா என்பது, மே 4ல் தெரிந்துவிடும்.
