நமது டில்லி நிருபர்நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து கொண்டு வரக் கோரி தாக்கல்

நமது டில்லி நிருபர்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் நிராகரித்தது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. அதை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கொள்ளுப் பேரன்களில் ஒருவரான ஆஷிஷ் ராய் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மாபெரும் தலைவரின் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வருவது தான் பொருத்தமாக இருக்கும்,’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி தற்போது எங்கு உள்ளது,” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிங்வி, ஜப்பானில் உள்ள ரென்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பல மூத்த தலைவர்கள் ஜப்பான் செல்லும் போது அங்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கூறியதாவது:

* நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தியாகத்திற்கு இந்த நீதிமன்றம் தலை வணங்குகிறது. ஆனால், இந்த மனுவை நேதாஜியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா?.

* இந்த விவகாரத்தில் நேதாஜி குடும்பத்தினர் தேவைப்பட்டால், தாமே நேரடியாக மனு தாக்கல் செய்யலாம். இதே போன்ற மனுவை கடந்த 2024ல் இந்த நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்து, மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது.

Source link