நமது டில்லி நிருபர்
மேற்காசிய போர் நிலவரம் குறித்து விவாதிக்க நாளை (மார்ச் 25) டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளதால், நம் நாடு உட்பட உலகம் முழுதும் எரிவாயு, கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேற்காசிய போர் விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில் மேற்காசிய போர் நிலவரம் குறித்து விவாதிக்க நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போர் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளிப்பார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
