– நமது டில்லி நிருபர் -: பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும்

– நமது டில்லி நிருபர் -:

பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் முட்டல் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.பி.,க்களுக்கு, பிரிவு உபச்சார உரை நிகழ்த்தும்போது, இருதரப்புக்கும் இடையில் காணப்பட்ட இணக்கமான சூழலால், நீண்ட நாட்களுக்கு பின் ராஜ்யசபா சிரிப்பலையில் அதிர்ந்தது.

ராஜ்யசபாவில், 20 மாநிலங்களைச் சேர்ந்த 59 எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிந்து, அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதை அடுத்து, பிரிவு உபச்சார உரை நேற்று நிகழ்த்தப்பட்டது.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எம்.பி.,க்களை வாழ்த்திப் பேசினர்.

பிரதமர் நரேந்திர மோடி, பேசியதாவது:

ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.பி.,க்களில், பலரும் மீண்டும் சபைக்கு திரும்புகின்றனர். அவர்கள் மிகுந்த அனுபவத்தை பெற்றவர்களாக திரும்புகின்றனர்.

அதேநேரம், இந்த சபைக்கு திரும்ப வராதவர்களுக்கு, நான் கூற விரும்புவது என்னவென்றால், ‘அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை’ என்பது மட்டும்தான். எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

உங்கள் அனுபவமும் பங்களிப்பும் என்றும், பார்லிமென்ட் வரலாற்றில் நினைவுகூரப்படும்.

கற்றுக்கொள்ள வேண்டும்

புதிய எம்.பி.,க்கள், அனைவரும் மல்லிகார்ஜுன கார்கே, தேவ கவுடா, சரத் பவார் ஆகியோரிடமிருந்து, நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்களின் பங்களிப்புகள் அனைத்தும் மதிப்பு மிக்கவை. இவர்கள் தங்கள் வாழ்நாளில், பெரும்பகுதியை பார்லிமென்ட்டில் செலவிட்டவர்கள்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பின்னர், ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அவரது பேச்சைக் கேட்டு பிரதமரே சிரித்துவிட்டார். இதற்கு காரணம், முன்னாள் பிரதமர் தேவகவுடா மீதான வாழ்த்துரை.

கடந்த, 1996 லோக்சபா தேர்தலுக்குப் பின் பிரதமராகி, சில மாதங்கள் மட்டுமே பதவியில், தேவகவுடா இருந்தார்.

அவர் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசை, காங்கிரஸ் ஆதரித்தது. 2018ல், தேவ கவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம், கர்நாடகாவில் காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து, வெற்றி பெற் றது. தேவ கவுடாவின் மகன் குமாரசாமி முதல்வர் ஆனார்.

54 ஆண்டுகள்

ஆனால், இருகட்சிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக, 2019ல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. பின்னர் பா.ஜ.,வுடன், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்தது. தற்போது, மத்திய அமைச்சராகவும் குமாரசாமி உள்ளார்.

ஓய்வுபெறும் எம்.பி.,க் களில் தேவ கவுடாவும் ஒருவர் என்பதால், அவரை வாழ்த்திப் பேசும்போது, கிண்டலடிக்கும் விதமாக, இந்த வரலாற்றுப் பின்னணியைக் மறைமுகமாக, ராஜ்யசபாவில் குறிப்பிட்டு, மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

தேவ கவுடாவைப் பொறுத்தவரையில், பிரதமராக மட்டுமல்ல, வேறு பல பதவிகளிலும் இருந்துள்ளார். எனக்கு, அவரை 54 ஆண்டுகளாகத் தெரியும், அவருடன் பணியாற்றியும் உள்ளேன்.

ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் எங்களுடன் பழகினார், எங்களை நேசித்தார். எங்கள் மீதுதான் காதல் கொண்டிருந்தார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியாது. அவர், பிரதமர் நரேந்திர மோடியைத் திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறு, மல்லிகார்ஜுன கார்கே கூறியதும், சபை முழுதும், சிரிப்பொலி எழுந்தது. சபையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’

குழுவுக்கு கால நீட்டிப் பு

நாடு முழுதும், ஒரே நேரத்தில், சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்த வழிவகை செய்யும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா குறித்து பா.ஜ., மூத்த எம்.பி.,யான பி.பி.சவுத்ரி தலைமையிான பார்லிமென்ட் கூட்டுக்குழு, ஆய்வு செய்து வருகிறது. இறுதிகட்டத்தில் இருக்கும் இந்த பணிகள் இன்னும் தொடர வேண்டியிருக்கிறது. இதனால், இந்த குழு, தங்கள் அறிக்கையை சமர்பிக்கத் தேவையான காலக்கெடுவை நீட்டிக்கும் வகையில், நேற்று லோக்சபாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரும், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின், முதல் அலுவல் நாளின்போது அறிக்கையை சமர்பிக்கவுள்ளது.

Source link