– நமது டில்லி நிருபர் –
”பார்லிமென்ட் வருகை பதிவேட்டில் ராகுலின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. கூட்டத்தொடர் நடக்கும்போது ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போய் விடுகிறார். உண்மை இப்படியிருக்க, பார்லிமென்ட்டில் என்னை பேசவே விடுவதில்லை எனக்கூறுவது என்ன நியாயம்?,” என, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவரை நேரடியாகவே விமர்சித்தது லோக்சபாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபாவில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது:விதிகளை நிலைநாட்டுவதுதான், சபாநாயகரின் தலையாய பணி. லோக்சபாவில், அவரது முடிவுதான் இறுதியானது. அவரது நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது குறித்து கேள்வி எழுப்ப கூடாது. இந்த தீர்மானமே, அந்த பதவியை இழிவுபடுத்தவதாக உள்ளது. இதன்மூலம், அவரை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அவமானப்படுத்தியுள்ளனர். இது கண்டனத்திற்குரியது.
ஆனாலும், இந்த தீர்மானத்தை கொண்டுவர, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. காரணம், தற்போது எமர்ஜென்சி போன்ற நெருக்கடி நிலை இல்லை.சபை விதிகளை, இஷ்டம்போல எதிர்க்கட்சிகள் வளைக்கின்றன. காங்கிரஸ் காலத்தில், விதிகள் எல்லாம் எப்படி மீறப்பட்டன என்பதை விவாதிக்க தயார். காங்கிரசின் விதிகளைக் கொண்டு, சபையை நடத்த முடியாது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள், அனைத்துமே பொய்யானவை.
பார்லிமென்ட்டில் பேசுவதற்கு நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போதெல்லாம், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார். நாங்கள் என்ன செய்வது? பார்லிமென்ட்டில் பேசுவதை விட்டுவிட்டு, ஜெர்மனிக்கு ஓடி விடுகிறார் ராகுல். ஜனாதிபதி உரைக்கு கூட வரவில்லை. பதிவேட்டின்படி, ராகுலின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. அரசிலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மற்றும் முக்கியமான விவாதங்கள் நடந்த போதெல்லாம் ராகுல் பங்கேற்கவில்லை.
ஒவ்வொக ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்போதெல்லாம், பிரிட்டன், சிங்கப்பூர், ஜெர்மனி என சுற்றிக் கொண்டே இருந்தால், உங்களால் பார்லிமென்ட்டில் எப்படி பேச முடியும்? வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்காக, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாகவா, பேச வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும்? உண்மை இப்படியிருக்க, பார்லிமென்ட்டில் பேசுவதற்கு உங்களை யார் தடுத்தது? நாங்கள் உங்களை தடுத்தோம் என்று கூறினால் அது எப்படி நியாயம் ஆகும்?இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு, தோற்கடிக்கப்பட்டது.
