– நமது டில்லி நிருபர் –
”மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது துரதிர்ஷ்டம். பெண்களுக்கு விரோதமானது; எதிரானது திமுக அரசு,” என, லோக்சபாவில் பாஜ மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.
லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம் எதிர்பார்த்த அளவுக்கு பயன் அளிக்கவில்லை என, திமுக – எம்.பி., அருண் கூறியது உண்மையல்ல. இதுவரை இல்லாதபடி, கடந்த பிப்ரவரியில் பயணியர் வாகனங்களின் விற்பனை, 26.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் ஆட்டோமொபைல் தொழில் பயனடைந்துள்ளது. ஒரகடத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கப் போகின்றன. ஓசூரிலும் தொழிற்சாலைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. மதுரையில் 36.4 சதவீதம் வரை டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். இது துரதிர்ஷ்டம். பெண்களுக்கு விரோதமானது; எதிரானது திமுக., அரசு. ‘இண்டி’ கூட்டணி கட்சியினர், மாநிலங்கள் அளவில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வர். ஆனால், திமுகவை ஆதரிப்பதற்காக மட்டும், இங்கு ஒரே அணியில் இருப்பர்; இது வெட்கக்கேடு.நான் பதிலளிக்கும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட திமுக – எம்.பி., சபையில் இருப்பதில்லை. ஆனால், அவருக்கு ஆதரவாக பிறர் குரல் எழுப்புவதை ஏற்க முடியாது. இது முதன்முறை இல்லை. தமிழக விவகாரங்களை பேசினால், திமுக – எம்.பி.,க்கள் சபையிலே இருப்பதில்லை; வெளியே ஓடி விடுகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதால், சில நாட்களாகவே, திமுக – எம்பிக்கள் யாரும் சபைக்கு வருவதில்லை. திமுகவை சரமாரியாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த போது, தமிழச்சி தங்கபாண்டியனை தவிர மற்ற திமுக – எம்பிக்கள் சபையில் தென்படவில்லை. இதனால், தேசியவாத காங்., – எம்பி சுப்ரியா சுலே, திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
விமான நிலையங்களில் ஏற்படும் சர்ச்சை குறித்து, தினந்தோறும் புகார்கள் வருகின்றன. அவற்றில் ஒன்றுக்கு தீர்வு காணும் விதமாக, பரிசுகள் மற்றும் தனிப்பட்ட இறக்குமதிகளுக்கான வரிகள் முறைப்படுத்தப்பட உள்ளன. நடுத்தர மக்களின் நலனை மையமாக வைத்து, நிதி மசோதாவின் ஒரு பகுதியாக இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவேறியது நிதி மசோதா
அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட 32 திருத்தங்களுடன், 2026க்கான நிதி மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்சபாவில் நிறைவேறியது. இதன் மூலம், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரும் அலுவல்களில் லோக்சபாவுக்கான பணிகள் நிறைவடைந்தன. இனி, இம்மசோதா ராஜ்யசபாவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
