– நமது டில்லி நிருபர் -: ''லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகே சென்று காங்., – எம்.பி.,க்கள்

– நமது டில்லி நிருபர் -:

”லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகே சென்று காங்., – எம்.பி.,க்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற உறுதியான தகவல் கிடைத்தது. அதனாலேயே சபைக்கு வர வேண்டாம் என, அவரை கேட்டுக் கொண்டேன். அப்படி நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்திருக்கும்,” என, சபாநாயகர் ஓம் பிர்லா திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ல் துவங்கியது. கடந்த 1ல், 2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.

ஆர்ப்பாட்டம்

காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும் இதுவரை வெளியிடப்படாத, அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடியை விமர்சித்தார்.

இதற்கு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசக்கூடாது’ என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் கண்டிப்பு காட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட காங்., – எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன் உள்ளிட்ட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

லோக்சபா நேற்று முன்தினம் காலை கூடியது முதலே, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகை யிட்டு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க் களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி உரை மீது, மாலை 5:00 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை தருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால், நாள் முழுதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால், பதிலுரை அளிக்க பிரதமர் மோடி, லோக்சபாவுக்கு வரவில்லை. இந்நிலையில், வழக்கம் போல லோக்சபா நேற்று காலை கூடியது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணி அளவில் மீண்டும் கூடியது.

அப்போதும் அமளி தொடரவே, இன்று காலை 11:00 மணி வரை சபையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.

கவலைக்குரியது

இதன்பின், சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:

லோக்சபாவில், ஜனாதிபதி உரைக்கு பதிலுரை அளிக்க பிரதமர் மோடி தயாராகவே இருந்தார். ஆனால், சபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் முறையற்றது.

குறிப்பாக, பிரதமர் மோடியின் இருக்கையை, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள் முற்றுகையிட்டது கவலைக்குரியது.

பார்லி., வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் இதற்கு முன் நடந்ததே இல்லை. சபைக்கு பிரதமர் மோடி வந்தால், காங்., – எம்.பி.,க்கள் அவரை சூழ்ந்து, எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது.

அப்படி நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்திருக்கும். சபையின் கண்ணியத்தை காக்க வேண்டியது என் பொறுப்பு என்பதால், சபைக்கு வர வேண்டாம் என, பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டேன். அதனாலேயே அவர் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமரின் பதிலுரையின்றி

நிறைவேறிய தீர்மானம்

லோக்சபா நேற்று காலை கூடியதும், அமளியும் துவங்கியது. ஒத்தி வைப்புக்கு பின், மதியம் 12:00 மணிக்கு சபை கூடியது. அப்போதும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.,க்களை அமைதி காக்கும்படி பல முறை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். பலனளிக்காமல் போகவே, வேறு வழியின்றி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கடும் அமளிக்கு மத்தியில் குரல் ஓட்டெடுப்பு நடத்திய சபாநாயகர் ஓம் பிர்லா, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து சபையை ஒத்தி வைத்தார். பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே, ஜனாதிபதி உரை மீதான தீர்மானம், லோக்சபாவில் மரபுக்கு மாறாக நேற்று நிறைவேற்றப்பட்டது.

கார்கே – அமைச்சர்கள் காரசார விவாதம்

ராஜ்யசபா காலையில் கூடியதும், காங்., – எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, காங்., தேசிய தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. கார்கே: லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத் தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமா க அவர் அனுமதிக்கப்படவில்லை. பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு: ‘ராகுலை யாரும் தடுக்கவில்லை. விதிகளை அவர் பின்பற்றுவதே இல்லை. லோக்சபா என்பது இன்னொரு சபை. அங்கு நடக்கும் விஷயங்களை இங்கு பேசுவது மரபல்ல. இரு சபைகளுக்குமே தனித்தனி விதிகள், மரபுகள் உள்ளன. சபை விதிகளை பின்பற்றும்படி, ராகுலுக்கு கார்கே அறிவுரை கூற வேண்டும். அதை விடுத்து, ராகுல் குறித்து இங்கு பேசுவது முறையல்ல. லோக்சபாவை போல, இங்கும் பிரதமர் மோடியை பதிலுரை நிகழ்த்த விடக்கூடாது என்ற எண்ணத்தில் தற்போது அமளியில் ஈடுபடுகிறீர்களா?’ கார்கே: ராகுலுக்கு லோக்சபாவில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை ராஜ்யசபாவில் விவாதிக்கக் கூடாது என்பது எந்த வகையில் சரி? மத்திய அமைச்சரும், சபை முன்னவருமான நட்டா: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க பிரதமர் மோடி தயாராக உள்ளார். அலுவல்களை நடத்த வழிவிட்டால் தானே, அவரால் பதிலளிக்க முடியும். ராகுலுக்கு சபையில் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அவர் தான் விதிகளை பின்பற்றவில்லை. உங்கள் கட்சியை, ஒரு சாதாரண குழந்தையின் பிடியில் சிக்க வைக்காதீர்கள். பார்லி.,யில் மட்டுமல்ல; கட்சியிலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துங்கள். கார்கே: ஆளுங்கட்சியில் உள்ள அனைவருமே கூலியாட்கள் போல உள்ளனர். உங்களை போல மற்றவர்களை படுகொலை செய்யவோ, அவமானப்படுத்தவோ எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: இதை ஏற்க முடியாது. இதெல்லாம் உங்களுக்கு தான் தெரியும். காங்., ஆட்சியில், ராஜஸ்தானில் ஒரு தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட போது நடவடிக்கை எடுக்கவில்லை; ஆசிரியர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட போதும் நடவடிக்கை இல்லை. எனவே, படுகொலை என்ற வார்த்தையை ஏற்க முடியாது. இப்படியே மாறி மாறி இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சியினர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Source link