நமது நிருபர்
அடோப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக, 18 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் இந்தியர் சாந்தனு நாராயண் பதவி விலக முடிவெடுத்துள்ளார்.
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று அடோப். அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரிலிருந்து செயல்படும் இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருப்பவர் சாந்தனு நாராயணன், 62. இந்தியரான இவர், 18 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் இருக்கிறார். கடந்த 2007ல் அடோப் தலைமை பொறுப்பை ஏற்ற சாந்தனு, நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றார்.
வெறும் மென்பொருள் நிறுவனமாக இல்லாமல், ‘கிளவுட்’ மற்றும் ‘ஏ.ஐ.,’ தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றினார். அவர் பொறுப்பேற்றபோது இருந்ததை காட்டிலும், இப்போது அவரது நிறுவனத்தின் வருமானம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர், ஒரு முறை மட்டுமே மென்பொருள் வாங்குவதை மாற்றி, மீண்டும் மீண்டும் அதை வாங்கச் செய்வதற்கான நடைமுறையை வெற்றிகரமாக அமல்படுத்தியவர் என்ற பெருமை, தொழில் துறையில் சாந்தனுக்கு உண்டு.
தற்போது ஏஐ தொழில்நுட்பப் புரட்சிக்கு மத்தியில், முதன்மை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து சாந்தனு நாராயண் விலகுவதாக அறிவித்துள்ளார். புதிய தலைமை நிர்வாகி தேர்வு செய்யப்படும் வரை சாந்தனு பொறுப்பில் தொடர்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த சாந்தனு நாராயண்?
* சாந்தனு நாராயண்1963ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். இவருக்கு வயது 63.
* இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்திலிருந்து மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் இளங்கலைப் பட்டத்தையும், பௌலிங் கிரீன் மாநிலப் பல்கலைக்கழகத்திலிருந்து கணினி அறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
* கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள ஹாஸ் வணிகப் பள்ளியில் (Haas School of Business) இவர் எம்பிஏ பட்டமும் பெற்றார்.
* 2007ம் ஆண்டின் இறுதியில் சாந்தனு நாராயண் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, அடோப் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட ஆறு மடங்காக உயர்ந்து, 24 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.
* மென்பொருள் துறையில் அடோப் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு இவரே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார்.
* இருப்பினும், நாராயண் நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் விதம் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
* ‘Generative AI’ தொழில்நுட்பத்தின் வருகையால், அடோப் நிறுவனத்தின் மென்பொருட்களின் துணையின்றி, காட்சி ஊடகங்களை (visual media) உருவாக்குவது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது.
* இத்தகைய படைப்பாற்றல் சார்ந்த பல AI டூல்கள், அடோப் நிறுவனத்தின் போட்டியாளர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி
சாந்தனு நாராயண் பதவி விலகல் அறிவிப்பு குறித்து அடோப் நிறுவனம் கூறியதாவது: நிறுவனத்தின் வளர்ச்சியில் அடுத்த அத்தியாயத்திற்கான சரியான தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நாங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்த மாற்றமானது எவ்விதச் சிக்கலுமின்றி நிறுவனம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதற்காக, சாந்தனு தொடர்ந்து வழங்கிவரும் தலைமைத்துவத்திற்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த சிஇஓவை தேர்வு செய்யும் வரை சாந்தனு நாராயண் பதவியில் தொடர்வார். இவ்வாறு அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
