நமது நிருபர்
ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்யும் என டிரம்ப் கூறி வருகிறார். பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்து வருகின்றன. ஈரான் அதிகாரிகள் இணையத்தை முடக்கி இருக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு, சாலை மூடல்கள், பொதுப் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் இணையத் தடைகள் ஆகியவை தொடர்ந்து நீடிக்கின்றன. ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கர்கள் இப்பொழுதே ஈரானை விட்டு வெளியேறுங்கள். உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு பாதுகாப்பான கட்டடத்தில் ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக தங்கி இருங்கள். உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்திருங்கள். ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். தற்போதைய செய்திகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் நீண்ட காலமாக தூதரக உறவு இல்லை. இதனால் அங்கு சொற்ப எண்ணிக்கையிலேயே அமெரிக்கர்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள், வேறு நாடுகளைச் சேர்ந்த இரட்டை குடியுரிமை பெற்ற அமெரிக்கர்களாக இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
