நமது நிருபர்
ஊட்டியில், 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நாய்கள் சிறப்பு பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊட்டி சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கு வரும், சில சுற்றுலா பயணியர் நாயை அழைத்து வருகின்றனர். இங்குள்ள பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு நாயை அழைத்து செல்ல முடியாமல் அவற்றை தனியார் அறையில் விட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்ப்பதற்காக நாய்களுக்கான சிறப்பு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, ஊட்டியில் மரவியல் பூங்கா பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய்களுக்கான சிறப்பு பூங்கா கடந்த, 5 மதங்களுக்கு முன்பு, அமைக்கப்பட்டது.
அங்கு நாய்களுக்கான சிறப்பு உபகரணங்கள், புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, காய்ந்த இறகுகளில் செய்யப்பட்ட குளம், பிரிங்ளர் தண்ணீர் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது நாய்களுக்கான மிகப்பெரிய புத்துணர்வு மையமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துவக்கப்பட்ட நாளிலிருந்து. நாய்களுடன் சொற்ப அளவில் சுற்றுலா பயணியர் வந்து சென்றுள்ளனர்.
இதனால், 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட இந்த தொகை வீணாகி உள்ளதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ‘கோடை சீசனின் போதாவது, இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் பயன்படுத்த வேண்டும்,’ என, வலியுறுத்தி உள்ளனர்.
