நமது நிருபர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது ஈரான் தாக்குதல் என போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோவை பரப்பிய இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து துவங்கிய போர், 15 நாட்களைக் கடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, சவுதி அரேபியா, யுஏஇ, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. விமான நிலையங்கள், முக்கிய பகுதிகள் குறிவைத்து தாக்கப்படுவதால், வளைகுடா நாடுகளில் சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது ஈரான் தாக்குதல் என போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ சமூக வலைதளத்தில் பரப்பட்டு உள்ளது. போர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறி இந்தியர்கள் 19 பேர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யுஏஇ அரசு செய்தி நிறுவனம் எமிரேட்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான், அமெரிக்கா போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த போரைச் சித்தரிக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இத்தகைய செயல் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை, சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. எனவே போலி வீடியோக்கள் பரப்பிய நபர்கள் கைது செய்யப்பட்டனர் என எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இந்தியர்கள் 19 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமானால் ஓராண்டு சிறை தண்டனையும், 25 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். அவர்களுக்கு நிச்சயமாக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
