நமது நிருபர்
கடந்த 20 ஆண்டுகளாக பரூக் அப்துல்லாவை கொலை செய்ய முயற்சித்தேன் என கைது செய்யப்பட்ட கமல்சிங் போலீசாரிடம் விசாரணையின் போது தெரிவித்தார்.
ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா. இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். நேற்று இரவு ஜம்மு கிரேட்டர் கைலாஷ் பகுதியில், கட்சி பிரமுகர் வீட்டு திருமண விழாவில் பரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி கலந்து கொண்டனர். பின், கட்சி நிர்வாகிகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருடன் வந்த காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி லேசான காயமடைந்தார். தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியை சேர்ந்த 63 வயதான கமல்சிங் ஜம்வால் என தெரியவந்தது. அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரிடம் விசாரணையின் போது, ”கடந்த 20 ஆண்டுகளாக நான் பரூக் அப்துல்லாவை கொலை செய்ய முயற்சித்தேன். அவரை தாக்க பயன்படுத்திய ஆயுதம் என்னுடையது. இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பரூக் அப்துல்லா உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்” என கைதான நபர் கமல் சிங் தெரிவித்தார்.
