நமது நிருபர்
காஸ் சிலிண்டர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து, அனைத்து மாவட்டங்களிலும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், மார்ச் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டறிக்கை:
மத்திய அரசின் தவறான வெளியுறவு கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும், நாடு முழுதும் சமையல் காஸ் சிலிண்டருக்கும், வணிக ரீதியிலான காஸ் சிலிண்டருக்கும், தட்டுபாடு ஏற்பட்டு, மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இது குறித்து, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தினார். தற்போது வரை, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மத்திய அரசை கண்டித்து, மார்ச் 15ம் தேதி காலை 10:30 மணிக்கு, அனைத்து மாவட்டங்களிலும், கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்படுகிறது.
மார்ச் 17ல் தேஜ கூட்டணி போராட்டம்
தமிழகத்தில் நடந்து வரும், பாலியல் வன்கொடுமையை கண்டித்து, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், வரும் மார்ச் 17ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் என்.டி.ஏ., கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி; மதுரையில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்; கோவையில், முன்னாள் தலைவர் அண்ணாமலை; கடலுாரில் பா.ம.க., தலைவர் அன்புமணி; தஞ்சாவூரில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்; ஈரோட்டில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
