நமது நிருபர்
”கொள்ளையடித்த பணத்தை கொடுத்து கூட்டணிக்கு கட்சிகளை பிடிக்கின்றனர். கல்லாப்பெட்டி கூட்டணி கணக்கு இனி செல்லாது,” என்று வேலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:
மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாத காரணத்தினால், இத்தனை வருடமாய் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் வந்தது தவெக.
ஒவ்வொரு வீட்டிலும் நாம் உயிராக இருக்கிறோம். உங்களை எல்லோரையும் நேரில் சந்திக்க எனக்கு ஆசை. எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
வாக்குறுதி
உங்கள் எல்லோருக்கும் நான் வாக்குறுதி கொடுக்கிறேன். நம்ம ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன், ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒன்று உருட்டினார். வரும் சட்டசபை தேர்தலை, தமிழகத்திற்கும், டில்லிக்கு இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள்.
இது தமிழகத்துக்கும்- தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள். என்ன சார் டில்லியில் போய் நிற்க போகிறீர்களா? இது பார்லிமென்ட் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிறீர்களா?
இது ஏன் தமிழகத்திற்கும், தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறீர்கள், எனக்கு ஏதும் புரியவில்லை. எந்த தேர்தலை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும். நம்ம தமிழக மக்களை மாதிரி நீங்கள் பார்க்கவே முடியாது.
தேர்தல் எதற்கு?
தமிழக மக்கள் சூப்பர் மக்கள் சார். இந்த போருக்கு போகும் போது தான் படையுடன் போவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் நீங்கள் பால் டப்பாவை உருட்டி கொண்டு இருக்கிறீர்கள் சார். உண்மைக்கும் இந்த தேர்தல் எதற்காக நடக்கிறது என்று சொல்கிறேன். தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் லஞ்சத்திற்கு இடையே நடக்குற போர்.
தவெக vs திமுக
தமிழக மக்களுக்கும், நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுக அரசுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர்; தமிழக மக்களுக்கும் ஸ்டாலின் சார்க்கும் இடையே நடக்குற போர்; இன்னும் சுருக்கமாக செல்லனும்னா விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்குற போர்.
தமிழகம் தான் இந்த விஜய். இந்த விஜய் தான் தமிழகம். தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கு இடையே தான் போர்.
கல்லாப்பெட்டி கூட்டணி
அறிவாலயம் பக்கத்தில் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார். கொள்ளையடித்து வைத்திருக்கிற பணத்தில் ஒரு பங்கு கொடுத்து கூட்டணியில் சேர்க்கின்றனர். அதற்கு கல்லாப்பெட்டி கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறேன்.
கஷ்டப்பட்டு கூட்டணி சேர்த்திருக்கிறார். அரதப்பழைய கூட்டணி கணக்கு மூலமாகவோ, கொள்ளையடித்த பணத்தில் எங்கள் மக்களை ஏமாற்றியோ ஜெயிக்க முடியாது. இது வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல். இவ்வாறு விஜய் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
