நமது நிருபர்
தர்மபுரி, பாலக்கோடு தொகுதியில் தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார், 45, வைத்திருந்த 1150 எண்ணிக்கையிலான ரூ.8,000 கூப்பன்கள், 1800 கிப்ட் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில் திமுக நிர்வாகிகள் சிலர், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்து, எங்கள் சின்னத்தில் ஓட்டு போடுங்கள், வெற்றி பெற்றதும் ரொக்கப் பரிசு, மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வழங்குவதாக கூறிவதாக புகார் எழுந்தது.
அதன்படி, பாலக்கோடு சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்க, தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார் எடுத்து சென்ற 8,000 ரூபாய்க்கான, 1,150 கூப்பன் மற்றும், 1,800 கிப்ட் டோக்கனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது சில திமுக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
