நமது நிருபர்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரி பந்தலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருப்பூர் அவினாசி சாலையில் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல ரூ. 35 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
1.26 கோடி ரூபாய்
உளுந்தூர் பேட்டையில் நடந்த வாகன சோதனையில் ஒரு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்பு மனுக்கள்
மார்ச் 31, ஏப்ரல் 3,4 மற்றும் 5ம் தேதிகள் விடுமுறை என்பதால் மனுதாக்கல் செய்ய முடியாது. மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பெறப்படும். தேர்தலை முன்னிட்டு 2106 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படையினரின் சோதனையில் பிடிபடும் பணம் அல்லது பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அர்சனா பட்நாயக் கூறினார்.
