நமது நிருபர்
புதுச்சேரியில் தே.ஜ., மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், நேற்று அதிரடியாக தி.மு.க., மற்றும் காங்., கட்சியினர் தனித்தனியே மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தினர்.
புதுச்சேரி 16வது சட்டசபை தேர்தல் வரும் ஏப்.9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலை சந்திக்க என்.ஆர்.காங்., தலைமையில் பா.ஜ., – அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநயாக கூட்டணியும், தி.மு.க., – காங்., – கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் உள்ள இண்டி கூட்டணியும் தயாராகின. கூட்டணி உறுதியானாலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இரு அணியிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதில் தே.ஜ., அணியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்., 16- பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் 14 தொகுதிகள் பங்கிட்டு கொள்ள முடிவான நிலையில், புதுச்சேரியில் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் துவங்கிய லட்சிய ஜன நாயக கட்சியை பா.ஜ., தன்னுடன் கூட்டணியில் சேர்க்க முன்வந்தது. அதற்கு, கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியில் இருந்து வெளியேறு வதாக அறிவித்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பா.ஜ., தலைமை, முதல்வர் ரங்கசாமியை சமாதானப்படுத்த பல்வேறு வகையில் முயற்சித்து வருகிறது. ஆனால், முதல்வர் ரங்கசாமி அதனை ஏற்க மறுத்து வருவதால், என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் என்.ஆர்.,காங்., தலைவர் ரங்கசாமி நேற்று மாலை வேட்பாளர் பட்டியலுடன் சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இதனால், இக்கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
‘ இண்டி’ யிலும் குழப்பம்
இதேபோன்று, இண்டி கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் காங்., மற்றும் தி.மு.க., கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உரசல், தொகுதி பங்கீட்டு வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. வேறு வழியின்றி இவ்விரு கட்சிகளும் நேற்று முன்தினம் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி, தொகுதி வாரியாக வேட்பாளர் களை இறுதி செய்து கட்சி தலைமையிடம் ஒப்படைத்துள்ள னர்.
இரு கட்சி தலைமைகளும் கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில் நேற்று அதிரடியாக தி.மு.க., வினர் 3 தொகுதிகளிலும், காங்., ஒரு தொகுதியிலும் மனு தாக்கல் செய்துள்ளனர். கட்சி தலைமைகள் கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில் இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக மனு தாக்கல் செய்ய துவங்கியுள்ளது. வாக்காளர்களி டையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
