நமது நிருபர்
மார்ச் 14 முதல் விமானங்களுக்கு ரூ.425 முதல் ரூ.2,300 வரை எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுதும் எண்ணெய் வினியோக தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமானங்களுக்கான எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து நிலைமையை சமாளிக்க எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான பயணங்களின் துாரத்தை பொறுத்து இந்த கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை மார்ச் 14 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்துகிறது.
இண்டிகோ விமானங்களில் புதிய முன்பதிவுகளுக்கான ஒட்டுமொத்த விலைகளில், எரிபொருள் கூடுதல் கட்டணமாக உள்நாட்டு இந்தியாவிற்குள் ரூ.425, மத்திய கிழக்கு ரூ.900, தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா ரூ.1800, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா ரூ.1800 மற்றும் ஐரோப்பா ரூ.2300 வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
